Breaking News

மாணவர்களுக்கு நற்செய்தி.. உணவு பட்டியலில் இனி இடியாப்பம்..!

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளின் உணவுப் பட்டியலில் தோசை, இடியாப்பம், நவதானிய உணவுகள் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் செயல்படும் 1354 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கு, கல்லூரி விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகள் என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற இத்துறையின் ஆய்வு கூட்டத்தில் விடுதி மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவு கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிதாக உணவு பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் கருத்துருவில் கல்லூரி, பள்ளி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ - மாணவியருக்கு,  இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்பிளைட் நியூட்ரிஷியன் பரிந்துரைத்துள்ள பட்டியலின் அடிப்படையில் காலை, மதியம், இரவு சிறப்பு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் அட்டவணைப்படுத்தி மாதாந்திர உணவு கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய திருத்தப்பட்ட உணவு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காலை உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் விவரம்:

திங்கள் கிழமை: சேமியா கிச்சடி ,தக்காளி சட்னி அல்லது சாம்பார்

செவ்வாய்க்கிழமை:  பூரி மசாலா

புதன்கிழமை:  இட்லி, சாம்பார், சட்னி

வியாழக்கிழமை: இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய் பால்

வெள்ளிக்கிழமை: பொங்கல், வரகு பொங்கல் /தினை பொங்கல்/ அரிசி பொங்கல், கத்திரிக்காய் கொத்சு, வடை.

சனிக்கிழமை: ரவா கிச்சடி, தேங்காய் சட்னி

ஞாயிற்றுக்கிழமை: தோசை / நவதானிய தோசை/ சாம்பார், சட்னி

மதிய உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் விவரம்:

திங்கட்கிழமை: சாதம், சாம்பார், இரு வகை பொரியல், ரசம், மோர், முட்டை மசாலா

செவ்வாய்க்கிழமை: காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை

புதன்கிழமை: சாதம் ஆட்டு இறைச்சி அல்லது கோழி குருமா அல்லது மட்டன் சிக்கன் குழம்பு, பொரியல், மோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய உணவு பட்டியல், கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஊட்டச்சத்து மிகுந்த உணவை, சுவையாக தயாரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, தோசை, இடியாப்பம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்காக, விடுதி பராமரிப்பு நிதியில் இருந்து, தோசைக்கல், இடியாப்பம் தயாரிக்கும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை வாங்கிக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.
அரசு மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம், நவதானிய உணவுகள்  சேர்ப்பு! தமிழக அரசு அரசாணை – www.patrikai.com

No comments