25 வயதில் தினம் ரூ.100 முதலீடு: 60 வயதில் தினம் ரூ.4,000 வருமானம்..!
இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை பணி ஓய்வுக் கால செலவுகள் ஆகும். அண்மைக் காலத்தில் பணியில் சேரும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை; தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பென்ஷன் இல்லை.
இதனால், அவர்கள் வயதான கால வாழ்க்கை குறித்து டென்ஷனாக இருக்கிறார்கள்.
60 வயதில் பென்ஷன்..!
பணியில் இருப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் எல்லாம், பணி ஓய்வுக் காலத்தில் அதாவது 60 வயதில் தங்களுக்கு தானே பென்ஷன் போன்ற தொகை தொடர்ந்து வருவது போல் ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.
அதற்கு வேலையில் இருப்பவர்கள் இ.பி.எஃப் என்கிற பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட், வேலையில் இல்லாதவர்கள் பி.பி.எஃப் என்கிற பொதுமக்களுக்கான பிராவிடெண்ட் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து வரலாம்.இ.பி.எஃப் முதலீட்டுக்கு தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8.15% வட்டி வழங்கப்படுகிறது. பி.பி.எஃப் முதலீடு 15 ஆண்டு கால திட்டமாகும். அதற்கு தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த இ.பி.எஃப் மற்றும் பி.பி.எஃப் வருமானம் என்பது பணவீக்க விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அந்த அளவுக்கு அல்லது அதனை விட சுமார் 1 சதவிகிதம்தான் அதிகமாக உள்ளது.
பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம்..!
அந்த வகையில், முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகும். அது போன்ற அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதன்மையானது பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களான நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.
நிறுவனப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வது அதிக ரிஸ்க்கானது; மேலும், பங்குச் சந்தை பற்றிய நல்ல அறிவு மற்றும் போதிய நேரம் இருந்தால்தான் அதில் லாபம் ஈட்ட முடியும். அந்த வகையில் நேரடி பங்கு முதலீடு மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்..!
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், சுமார் 50 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. அதுவும் பல்வேறு துறை நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது.
இதனால், ரிஸ்க் என்பது நீண்ட காலத்தில் கணிசமாக குறைகிறது. டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் எதிர்பார்க்கலாம்.
இன்றைக்கு சுமார் 20-22 வயதில் படிப்பு முடிந்து 23-24 வயதில் எல்லாம் வேலைக்குச் சேர்ந்து விடுகிறார்கள். ஆரம்பச் சம்பளம் சுமார் 25,000- 30,000 ஆக இருக்கிறார்கள். இவர்கள் வேலைக்கு சேர்ந்த உடனே சுமார் 25 வயதிலேயே பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டால், பணி ஓய்வுக் காலத்தில் செலவுக்கு தேவையான பணம் பற்றி கவலைப்பட தேவையில்லை.
தினம் ரூ.100 முதலீடு..!
இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிக்கும் போது சிறிய தொகையை முதலீடு செய்து வந்தாலே போதும் பெரிய தொகுப்பு நிதி (Corpus) சேர்ந்துவிடும். 25 வயதில் ஒருவர் தினசரி ரூ.100 வீதம் அதாவது மாதம் ரூ.3,000 வீதம் அவரின் 60 வயது வரைக்கும் முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவர் மொத்தம் 35 ஆண்டுகளில் மொத்தம் ரூ.12.60 லட்சம் முதலீடு செய்திருப்பார். இந்த பணத்தை அவர் நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்து வருகிறார் என்றும் அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் கிடைத்தால் தொகுப்பு நிதி ரூ. 1,94,85,810 சேர்ந்திருக்கும்.
அட்டவணைமியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை; உண்மையான 5 லாபங்கள்..!இந்தப் பணத்தை ஆண்டுக்கு 8 சதவிகிதம் வருமானம் தரும் முதலீட்டுத் திட்டம் ஒன்றில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.15.6 லட்சம் வருமானம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.1.3 லட்சம் கிடைக்கும்; தினசரி ரூ.4,330 கிடைக்கும் எனலாம். இது ஒரு தோராய கணக்கீடுதான். ரூ.4,000 கிடைத்தாலே அதனை கொண்டு செலவுகளை சுலபமாக சமாளிக்க முடியும்.
இதுவே தினசரி ரூ.100-க்கு பதில் ரூ.150, ரூ.200, ரூ.250, ரூ.300 முதலீடு செய்து வந்தால் மிக அதிக தொகுப்பு நிதி சேர்வதோடு, 60 வயதில் தினம் அதிக தொகை கிடைக்கும். விரிவான விவரங்களுக்கு மேலே உள்ள அட்டவணையை பாருங்கள்.
No comments