Breaking News

மத்திய பட்ஜெட்: மாத சம்பளம் வாங்குபவர்கள் என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்:

 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளது.

குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் வரை நடைமுறையில் இருக்கும். மே அல்லது ஜூனில் புதிய அரசு அமைய உள்ளதால், அது வரையிலான காலகட்டத்திற்கு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரவிருக்கும் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுத் திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார நாட்காட்டியில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பாக மக்களை கவரும் விதமாக எதுவும் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கலுக்கான விலக்கு குறைந்தது 5 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் மத்தியில் உள்ளது. அதேபோல் வரி விகிதங்களையும் 10% 20% 30% என மட்டுமே என எளிமைப்படுத்தி செஸ் மற்றும் சர்ஜார்ஜ்கள் ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சம்பளம் வருவாயை தவிர பிற வருவாய் எதுவும் இல்லாதவர்களுக்கு டிடிஎஸ் உடன் நிறுவனங்கள் சமர்பிப்பததை தானாக ஆட்டோ ரிட்டர்ன் (auto return) ஆக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட எதிர்பர்ப்புகளும் உள்ளன.

அதேபோல மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. முக்கியமாக பலர் பயன்படுத்தும் பழைய வரி விதிப்பு முறையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி உள்ளது. எனவே இது குறைக்கப்படுமா என்ற கேள்வி நடுத்தரத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

வரி செலுத்துபவர் புதிய வரி முறையை தேர்வு செய்தால், அவர் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும் என்று தற்போது மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு வரும் 1 ஆம் தேதி விடை கிடைத்துவிடும்.

No comments