Breaking News

இனிமேல் 3 நாட்கள் விடுமுறை.. தினமும் 12 மணி நேர வேலை.. பட்ஜெட்டில் வருகிறது புதிய அறிவிப்பு?


மத்திய பாஜக அரசு 2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 6 நாள் வேலை என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் மத்திய பாஜக அரசு 2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

அதன்படி, 3 நாள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. ஜூலை 1 முதல், நிறுவனங்கள் வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்க முடியும். ஊழியர்கள் ஒரு நாளைக்கு 10-12 மணிநேரம் 4 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த புதிய விதிகளுக்குப் பிறகு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க முடியும்.

கடந்த பட்ஜெட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டம்: அதற்கு முன்னதாக தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் இந்த மசோதா அமலுக்கே வரவில்லை.

தொழிலாளர் சட்டம்: 2021 தொடக்கத்திலேயே மத்திய அரசின் இந்த தொடர்பான செய்திகள் வெளியாகின. வாரத்திற்கு வேலை நாட்களை நான்காக குறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க வேண்டும். தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியல் என்பதால் மாநில அரசுகளும் இதற்கு ஏற்றபடி விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு முழுக்க ஒரே மாதிரி தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர முடியும்.

அதன்படி தொழிலாளர்களின் வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்கவும், பணி நேரத்தை அதிகரிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு வசதியாக பணி விதி, ஊதிய விதி, அலுவலக உறவு மற்றும் பணி பாதுகாப்பு விதி, ஆரோக்கியமான பணி சூழல் விதி ஆகிய 4 விதிகளில் மாற்றம் ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது.

இதை 13 மாநிலங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் சில மாநிலங்களில் ஏற்கும் முடிவில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் வரும் ஆண்டிலேயே இந்த 4 நாள் வேலை விதிமுறை அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் இப்போது 8 மணி நேரமாக இருக்கும் பணி நேரம் வார விடுமுறை மாற்றம் காரணமாக 12 மணி நேரமாக மாற்றப்படும் என்றும்கூறப்பட்டது . பணிகள், உற்பத்திகள் விடுமுறையால் பாதிக்க கூடாது என்பதால் பணி நேரம் 12 மணி நேரமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இந்த 2024 பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

No comments