ஜூன் 9-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: விண்ணப்பிக்க பிப். 28-ம் தேதி கடைசி நாளாகும்
கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும்6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த தொகுதியில் புதிதாக வனக்காப்பாளர், வனப்பாதுகாவலர் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை வன சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் அந்தபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில் வனக் காப்பாளர், வனப் பாதுகாவலர் பணிகளில் மட்டும் 1,177 இடங்கள் இந்தஅறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளன.
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. விருப்பமுள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் (https://www.tnpsc.gov.in/)வழியாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து எழுத்துத் தேர்வு ஜூன்9-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கும்.
தேர்வானது தமிழ் தகுதித்தாள் 100, பொதுஅறிவு தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தமிழ் தகுதித் தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறியதாவது: குரூப் 4 தொகுதியில் வனத்துறைபணியிடங்கள் சேர்க்கப்பட்டது வரவேற்கத்தக்க முடிவாகும். அதேநேரம் இந்த தேர்வு முடிவுகளை வெளியிட 6 மாத காலமாகும் என்பது அதிகமாகும். எனவே, விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், கடந்த 4 ஆண்டுகளில் (2020 முதல் 2023 வரை) 2022-ம் ஆண்டு மட்டுமே குரூப் 4 அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. வனத்துறை, மகளிர் மேம்பாடு, பால்உற்பத்தியாளர் கழகம், தடவியல்என பல்வேறு துறைகளின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் அடுத்த அறிவிப்பாணையில் பணியிடங்கள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது. எனவே பணியிட எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.
எந்த பணிக்கு எத்தனை இடம்?
குரூப் 4 பதவிகளில் இடம் பெற்றுள்ள காலிப் பணியிடங்களின் விவரம் வருமாறு: கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்தர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளார்க்- 3, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, பால் பதிவாளர்- 15, வரவேற்பாளர்- 1, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்தஉதவியாளர்- 49, வனக் காப்பாளர், பாதுகாவலர்- 1,177 மற்றும் இளநிலை ஆய்வாளர்- 1. ஆகும்.
No comments