TETOJAC பல்லி இதுக்கு மட்டுந்தான் கத்துதா? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
அரசாணை 243ன் பயனை 100% ஆட்சியாளர்கள் அறுவடை செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு இப்பதிவின் தலைப்பும், இத்தலைப்பு ஒருகூட்ட ஆசிரியர்களின் எண்ணத்தில் உதித்துவிட்டது என்பதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
யார் ஆண்டாலும் ஆட்சியாளர்களின் எண்ணம் என்பது 100% சங்கங்களின் ஒற்றுமையை இயன்றமட்டும் உடைத்துச் சிதைப்பது மட்டுமே! இந்த எண்ணம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக ஈடேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தற்போது இந்த விடியல் ஆட்சியிலும் பல்வேறாக ஈடேற்றப்பட்டுள்ளது.
இந்த 3 ஆண்டுகால விடியல் ஆட்சியில் TETOJAC & JACTTO-GEO கூட்டமைப்புகள் & இயக்கங்களின் செயல்பாடுகள் மீது இந்நொடி வரை 100% எனக்கு விமர்சனம் உண்டு. அதற்காக ஒட்டுமொத்தமாக இது போன்ற கூட்டமைப்புகளையோ / இயக்கங்களையோ அழித்து ஒழிக்க விட்டுவிட்டு, எந்தவொரு உரிமையையும் பெற்றுவிடலாம் என்ற ஆகத்தவறான சிந்தைக்கு என் சிந்தையைக் கடன் கொடுக்க எனக்கு உடன்பாடில்லை. இதனை என்னோடே நிறுத்திக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதாலேயே எனது தெளிவை எனது ஆசிரிய சமூகத்திற்கும் கடத்த விரும்பி இப்பதிவைத் தொடர்கிறேன்.
FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 01.06.2009ன் படி நடைமுறைக்கு வந்த ஊதிய மாற்றக் குழுவில் இ.நி.ஆகளின் மத்திய அரசுக்கிணையான ஊதிய உரிமை பறிபோனபோது 2009 - 2011 காலகட்டங்களில் TETOJAC வட்டார ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மாவட்ட மறியல், மாநிலத் தலைநகர் மறியல் உள்ளிட்டவை நடத்தியதன் விளைவாக PP750 மட்டும் கிடைக்கப்பெற்றது.
அதற்பின்னர் TETOJAC நீர்த்துப்போக, TNPTF தனிச்சங்கமாக சென்னை காமராஜர் அரங்கில் ஊதிய மீட்பு மாநாடு, அண்ணா அரங்கில் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடு, அரசாணை எரிப்புப் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தியது.
2016-ல் TNGEA & TNPTF வேலைநிறுத்த காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக CPS நீக்க வல்லுநர்குழுவும், 2003லிருந்து அதுவரை CPSல் இறந்த / ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதிக்கான அரசாணை (13 ஆண்டுகள் கழித்து) வெளிவந்தது.
2017-ல் மீண்டும் JACTTO-GEO கூட, மிகச் சிறப்பானதொரு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி, மதுரை உயர் வழக்காடு மன்றக் கிளையில் போராட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தது என்றாலும் ஓய்வூதியமோ, ஊதிய முரண்களோ சரி செய்யப்படவே இல்லை. அவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.
2019-ல் மீண்டும் JACTTO-GEO தொடர் வேலைநிறுத்தத்தைக் கையிலெடுக்க 9 நாள்களோடே எவ்வித கோரிக்கை நிறைவேற்றமுமின்றி முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
ஆட்சியாளர்களின் நெருக்கடி ஒருபுறமிருக்க, ஒவ்வொருமுறை கூட்டமைப்பின் செயல்பாடுகள் முடங்கிப் போவதற்கு கூட்டமைப்பில் உள்ள எதேனும் சில சங்கங்களின் தலைமைகளே காரணமாக இருந்து வந்துள்ளனர்.
இதனால், சங்கங்களின் மீது நம்பிக்கையை இழந்த இ.நி.ஆகள் தங்களது ஊதிய உரிமையை ஓரளவாவது மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் 2009 & TET ஆசிரியர்கள் எனும் பதாகையின்கீழ் 6 / 7 முறை உண்ணாவிரதப் போராட்டங்களைத் தனியே முன்னெடுத்தனர். ஒவ்வொருமுறையும் வழக்கமான சமாளிப்புகளோடே ஆட்சியாளர்களால் முடித்து வைக்கப்பட இறுதியாகக் குழுவும் அமைக்கப்பட்டது. குழு அமைத்து ஓராண்டாகியும் பதிலில்லாத சூழலில் மீண்டும் போராட்டம் மீண்டும் குழுக்காலம் நீட்டிப்பு என அதுவும் தற்போது முடிவுற்றுவிட்டது; பதிலில்லை.
மேலும், இவர்களின் ஒற்றுமையைச் சிதைக்க ஆட்சியாளர்களின் நேசர்கள் சிலரின் வழிகாட்டுதலில் 2009ல் பணியேற்ற இ.நி.ஆகளை மட்டும் பிரித்து தனிச் சங்கமாக உருவாக்க வைத்துள்ளனர். மெய்யாகவே கோரிக்கையை நிறைவேற்றுவது மட்டுமே ஆட்சியாளர்களின் நோக்கமெனில், இவர்களைத் தனியே சங்கமாக வாருங்கள் என அழைப்புவிடுக்கத்தேவையே இல்லை. குழுவாக / இயக்கமாகக் (Movement) கேட்பதற்கும் சங்கமாக்கிக் கேட்க வைப்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் அதன் உள்ளார்ந்த நோக்கத்தையும் சார்ந்தோர் உணர முன்வர வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, திமுக சார்பான சங்கங்கள் & அவர்களது நேசச் சங்கத் தலைமைகளை இணைத்துத் தனியாகவொரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதா / ஆட்சியாளர்களுக்காக உருவாக்கப்பட்டதா என்பது அவரவர் புரிதலை ஒத்தது. இவ்வாறு கூட்டமைப்பைக் கட்டுவதில் 100% தவறில்லை. அது அவர்களின் உரிமை. அதை விமர்சிக்க வேண்டிய அவசியமுமில்லை.
ஆனால், அதைக் கடந்து JACTTO-GEOவிற்குள்ளாக இவர்களது தலையீடு என்பது அதன் வேகத்தை மட்டுப்படுத்துவதாக / திசை திருப்புவதாகவே அமைந்து வருகின்றன எனும் போது இப்போக்கை விமர்சிக்கக் கூடாது என்று கூற எவருக்கும் உரிமையில்லை. பள்ளிக் கல்வித்துறையிலும் JACTTO-GEO இரு கூறாகப் பிரிந்து ஒரு தரப்பு மட்டும் போராட்டங்களை நடத்தியது.
தற்போது 243 அரசாணையின் படி, பட்டதாரி சங்கங்கள் - தொ.க.துறை பட்டதாரிகள் - 243ஐ வரவேற்கும் இ.நி.ஆகள் - 243ஐ எதிர்க்கும் தொ.க.து சங்கங்கள் என்று சல்லி சல்லியாகப் பிரித்துவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்.
243ன் படி 15% பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உரிமை வழங்குவதாகக் கூறிவிட்டு 65% இ.நி.ஆகளின் பதவி உயர்வு உரிமை முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமைப் பறிப்பையே அறியாதபடி மாநில அளவிலான Seniority எனும் பேரில் இ.நி.ஆகள் சிலரின் சிந்தை சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் TETOJAC 243ஐ முதன்மைப்படுத்தி போராட்டங்களை இன்றைய சூழலில் நடத்திவருகிறது. இது இப்போதைய சூழல் மட்டுமே. நாளையே இதைவிடப் பெரிய / Instant பாதிப்பை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினால் அதனை முதன்மைப்படுத்தியதாகப் போராட்டப்பாதை மாறிவிடும்.
ஆம். 2023-ல் மீண்டும் TETOJAC கூடியது பதவி உயர்விற்கு TET தேவை என்பதை எதிர்த்துத்தான். ஆனால், அடுத்த ஒருசில மாதங்களிலேயே கற்பித்தலைப் பாதிக்கும் Online & RP பணிகளுக்கு எதிரான கோரிக்கையை முதன்மைப்படுத்த வேண்டிய தேவையை ஆட்சியாளர்கள் உருவாக்கினர். இன்றோ 243ஐ முதன்மைப்படுத்தும்படியாக அதன் போக்கை மாற்றிவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்.
எனவே, உங்கள் உள்ளத்தில் உதித்துள்ளது போல TETOJAC பல்லி இதுக்காக மட்டும் கத்தவில்லை. விடியல் ஆட்சியில் TETOJAC மீண்டும் கட்டப்பட்டதன் தேவையையே 6 மாதங்களில் 3 முறை மாற்ற வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள். இம்மாற்றங்கள் தொடர்ந்து தொடரும்.
விடியல் ஆட்சியில் சங்கங்கள் இரு கூறாகப் பிரிந்து போயுள்ளன!
☝🏼 நிழலிற்கும் நன்றி நவில்பவை
✌🏼 கொஞ்சிக் கெஞ்சுபவை
இதே நிலையில் இவைகள் தொடருமாயின் நமக்கான எந்தவொரு உரிமையையும் நாம் மீட்கவே முடியாது என்பதோடே, இனி வரும் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு உரிமையாக நாம் இழக்கத்தான் நேரிடும் என்பதைப் புரிந்துகொள்ள முன்வர வேண்டுகிறேன்.
ஒரு இ.நி.ஆசிரியனாக நான் என்னைப்போன்ற ஒட்டுமொத்த இ.நி.ஆசிரியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், ஊக்க ஊதியம், ஒப்படைப்பு ஊதியம், கற்பித்தல் சுதந்திரம், பதவி உயர்வு உரிமை என மீட்கப்பட வேண்டியவை தொடர்வண்டி போல உள்ள சூழலில், இதனை உரிய நிறுத்தத்திற்கு நேராக இட்டுச் செல்லும் Engine பெட்டியையும் அதை இயக்கும் Loco Pilotஐயும் ஆக்கப்பூர்வமாக - நமக்கான தீர்வை நோக்கி நகர்த்திட விமர்சிப்பதும், உடன் கரம் கொடுப்பதும் இன்றைய காலத் தேவை என்பதைத் தெளிந்துள்ளேன்.
மேலும், இதில் ஏதேனும் ஒன்று மட்டுந்தான் தங்களுக்கான தீர்வு எனக் கருதி உங்களது உரிமைச் சிறகைச் சுருக்கிக் கொள்ள நீங்கள் விரும்பினால், அதற்கான களத்தில் முழுமூச்சாக இயங்குங்கள்; அதேநேரம், ஒட்டுமொத்த / மற்ற தீர்விற்கான களத்திற்கு வர விருப்பமில்லை எனினும் அதன் தேவையையும் அதற்கான களத்தையும் தங்களது தர்க்கமற்ற விமர்சனங்களால் உதாசீனப்படுத்தாதே அமைதி காத்து நகர்ந்துவிடுங்கள் என்பதை எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோளாக வைக்கிறேன்.
ஏனெனில் இன்றும் - இனியும் நமக்கான முதல் தேவை, ஒட்டுமொத்த தீர்விற்கு நேரான ஆசிரிய சமூகத்தின் ஒற்றுமையே!
ஒன்றை மட்டும் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் *பயங்கரவாதத்தைவிட மிகக் கொடியது அரச பயங்கரவாதம். அது எப்போதும் ரத்தத்தையும் சடலங்களையும் மட்டுமே இரையாக்கிக் கொள்வதில்லை. பல நேரங்களில் கருத்தையும் ஒற்றுமையையும் இரையாக்கிக் கொண்டு இறுமாப்பாகக் கடந்து கொண்டேயிருக்கும்.*
243-ஐ ஏற்பதும் எதிர்ப்பதும் தனிப்பட்ட தர்க்கரீதியிலான விவாதங்களுக்கு உட்பட்டது. இதில் நீங்கள் எந்நிலைப்பாட்டில் இருப்பினும், சங்கங்களின் போக்கை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களின் போக்கை நிதானித்துத் தெளிய வேண்டிய மிக முக்கியமான தேவையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டியே எனது இம்மெனக்கிடல்.
முழுமையாக வாசித்தமைக்கு நன்றி!
No comments