Breaking News

எகிறும் மருத்துவ செலவுகள்.. பட்ஜெட்டில் பிரிவு 80டி டார்கெட்.. சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்..!


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த பட்ஜெட்டில், மருத்துவ காப்பீட்டுக்கான பிரிவு 80டி வரி சலுகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80டி, மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியங்களை செலுத்துவதற்கும், உடல் நலம் தொடர்பான செலவுகளை தேர்ந்தெடுப்பதற்கும் வரி விலக்குகளை பெற உங்களை அனுமதிக்கிறது. 60 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், ரூ.25,000 வரை வரி விலக்கு பெறலாம். 

அதேசமயம் மூத்த குடிமக்கள் என்றால் ரூ.50,000 வரை வரிச் சலுகையை பெறலாம். 2015ம் ஆண்டு பட்ஜெட்டில், 80டி பிரிவின் கீழ் விலக்கு வரம்பை ரூ.15,000த்திலிருந்து ரூ.25,000ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை அதில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.தற்போது மருத்துவ செலவினம் அதிகரித்து விட்டது. 

இதனால் இப்போது மருத்துவ அவசர நிலைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் போதுமான உடல்நலக் காப்பீட்டை வாங்க ரூ.25,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரிச் சலுகை போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுவான நோய்களுக்கான சிகிச்சை செலவு ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு போதுமானதாக இல்லை.

வரி விலக்கு வரம்பு ரூ.25,000 என்பது பொதுவாக இன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் மருத்துவ காப்பீட்டின் பிரீமியத்தை உள்ளடக்காது. 40 வயதுக்கு மேற்பட்டவராகவும், 3 பேர் கொண்ட குடும்பத்தை உடையவராக இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவ காப்பீட்டின் பிரீமியத்திற்காக இன்னும் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.ஒரு குடும்பத்தில் ஒரே நேரத்தில் பல நோய்வாய்ப்பட்டால் மருத்துவச் செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்பதை கோவிட் நமக்கு உணர்த்தியது. 

எனவே அதிகரித்து வரும் மருத்துவ பணவீக்கத்தை சமாளிக்க காப்பீட்டு தொகையை அவ்வப்போது அதிகரிக்க வேண்டும்.60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும். 60 வயதுக்கு மேற்பட்ட இருவருக்கு ரூ.10 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீட்டுக்கான சராசரி பிரீமியத் தொகை சுமார் ரூ.69,178 செலவாகும். இதனால் தற்போதைய சூழ்நிலைக்கு, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ரூ.50,000 வரிச் சலுகை போதாது.இதனால், வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80டி-ன் கீழ் வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறுகையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான பிரிவு 80டி-ன் கீழ் வரி விலக்கு வரம்பை ரூ.50,000த்திலிருந்து ரூ.75,000ஆக உயர்த்த வேண்டும்.போதுமான மருத்துவ காப்பீட்டை வாங்க அதிக மக்களை ஊக்குவிக்கவும், பொது சுகாதார அமைப்பின் மீதான சுமையை குறைக்கவும் வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.நிவா பூபா ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓவான கிருஷ்ணன் ராமச்சந்திரன் கூறுகையில், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு மிகவும் தேவை என்பதால், 60 வயதுக்குட்பட்ட பெற்றோருக்கு ரூ.50,000மும், 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சமும் வரி விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். வரி விலக்கை உயர்த்தினால், வயதான பெற்றோர்களுக்கான மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்ய அதிகமான மக்களை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

No comments