யூடியூபில் விளம்பரம் பார்க்க பணம் தருவது எப்படி? மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிப்பது சாத்தியமா?
யூடியூப் விளம்பரங்களைப் பார்த்தால் பணம் தருவதாகக் கூறி சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், இப்படி ஒரு திட்டம் செயல்படவே வாய்ப்பில்லை, இது மிகப்பெரிய மோசடி என்கிறார்கள் நிபுணர்கள். இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது?
தமிழ்நாட்டின் பல நகரங்களில் குறிப்பாக மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தாங்கள் அனுப்பும் யூடியூப் விளம்பரங்களைப் பார்த்தால், குறிப்பிட்ட அளவு பணம் தருவதாகக் கூறி சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று கோவையில் சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வரும் மைவி3 ஆட்ஸ் (Myv3 Ads) எனும் நிறுவனம், மோசடி செய்வதாகக் கூறி ஒருவர் புகார் அளித்ததும் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக கோயம்புத்தூரில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்ட நிகழ்வு சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள் தாங்கள் நியாயமான வழியில் சம்பாதிப்பதாகவும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தாங்கள் பெரிய அளவில் சம்பாதிப்பது பிடிக்காத சிலரே இதுபோன்று புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் அளவுக்கு சம்பாதிப்பதாகவும் தெரிவித்தனர்.
உண்மையில் யூடியூபில் விளம்பரங்களைப் பார்த்தால், இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா? "நிச்சயம் முடியாது. இதுதான் நம் வாழ்வில் நாம் காணப் போகும் மிகப் பெரிய மோசடியாக இருக்கப் போகிறது" என்கிறார் இதுபோன்ற மோசடிகள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் சைபர் கிரைம் நிபுணரான ஹரிஹரசுதன் தங்கவேலு.
யூடியூபில் விளம்பரம் பார்க்க பணம் தருவது எப்படி?
முதலில் இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம், ஆறு வகைகளில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. முதல் வகையில் சேர்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இவர்கள் விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் தினமும் ஐந்து ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆகவே மாதம் 150 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அடுத்த வகையில், 360 ரூபாய் செலுத்தி உறுப்பினராக வேண்டும். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 ரூபாய் கிடைக்கும். அடுத்தடுத்த வகைகளில் எந்த அளவுக்குக் கட்டணம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு தினம் கிடைக்கும் பணத்தின் அளவும் அதிகரிக்கும்.
இதன் உச்சகட்டமாக 1,21,260 ரூபாய் செலுத்தி கிரவுன் உறுப்பினர் ஆகலாம். இவர்களுக்கு தினமும் 480 ரூபாய் கிடைக்கும். இதெல்லாம் தவிர, செலுத்திய பணத்திற்கு ஏற்றபடி சில பொருட்களையும் இந்த நிறுவனங்கள் தருகின்றன.
இதற்கு அடுத்தகட்டமாக ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்களைச் சேர்த்துவிடும்படி கூறப்படுவார்கள். அப்படிச் சேர்த்துவிடும்போது, பொருட்களாகவும் பணமாகவும் கமிஷன் கிடைக்கும். உதாரணமாக புதிய உறுப்பினரைச் சேர்த்துவிடும் அடிப்படை உறுப்பினருக்கு 15 ரூபாய் கிடைக்கும்.
அதேநேரம், கிரவுன் உறுப்பினர் புதிதாக ஒருவரைச் சேர்த்துவிட்டால், அவருக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இதுதவிர, இவரால் சேர்த்துவிடப்பட்டவர்கள், புதிதாக உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், அதிலிருந்தும் சிறிய அளவு கமிஷன் கிடைக்கும்.
மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிப்பது சாத்தியமா?
வீடியோ பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற இந்தத் திட்டம், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக முதலில் மதுரைப் பகுதியில் பரவ ஆரம்பித்தது. பிறகு கோவைப் பகுதியில் அறிமுகமானது. அங்கு இந்தத் திட்டத்திற்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.
இந்தப் பகுதியில் பலர் 1,21,00 ரூபாய் செலுத்த வேண்டிய கிரவுன் உறுப்பினர் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் இணைத்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தை ஒவ்வொரு நாளும் எடுக்க முடியாது. மாதம் ஒரு முறைதான் நம் ஊதியத்தைப் பெற முடியும்.
தவிர, இதற்கு சேவை கட்டணம், தயாரிப்புக் கட்டணம் என கிட்டத்தட்ட 30 சதவீதம் பிடித்தத்திற்குப் பிறகே மீதத் தொகை வரவு வைக்கப்படும். ஆகவே, கிரவுன் உறுப்பினராக இருப்பவருக்கு மாதம் 10,000 ரூபாய் அளவுக்கே பணம் கிடைக்கக்கூடும்.
நீங்கள் விளம்பரம் பார்ப்பதை உறுதிசெய்ய நடுநடுவே விளம்பரத்தைப் பார்க்கிறீர்களா எனக் கேட்கப்படும். ஆம் எனச் சொல்லி 'க்ளிக்' செய்ய வேண்டியிருக்கும். முடிவில், திரையில் தெரியும் Code-ஐ வாட்சப் செய்யவும் வேண்டும்.
"எல்லா எம்எல்எம் திட்டங்களைப் போலவேதான் இது செயல்படுகிறது. அதாவது ஒருவர் செலுத்திய கட்டணமே திரும்ப அவருக்கே வழங்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் நீங்கள் புதிய புதிய உறுப்பினர்களைச் சேர்த்துவிட வேண்டியிருக்கும். அந்தப் புதிய உறுப்பினர்கள் செலுத்தும் பணத்தில் இருந்து உங்களுக்கு ஒரு பகுதி வரும்.
அடுத்தடுத்து உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்வரை, இந்தத் திட்டம் தடையில்லாமல் நடந்துவரும். ஏதாவது ஒரு கட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை தடைபட்டால், இந்தக் கோபுரம் சரியும். அப்படி நடக்கும்போது, நம் தலைமுறையில் நாம் பார்க்கக்கூடிய மிகப் பெரிய மோசடியாக இது இருக்கும்" என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள்
அடிப்படையில் இந்தத் திட்டமும் Ponzy திட்டம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டம்தான். ஆனால், இதுபோல மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டங்களை நடத்துவதை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. பரிசு சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் (தடை) சட்டம் 1978-ன் கீழ் இது போன்ற திட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
தவிர, இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யாமல் பொதுமக்களிடம் இருந்து வைப்பு நிதியைப் பெறுவதையும் அரசு தடை செய்துள்ளது. வரைமுறைப்படுத்தப்படாத வைப்பு நிதி திட்டங்கள் தடைச் சட்டம், 2019-ன் கீழ் ரிசர்வ் வங்கியிடம் பதிவுசெய்யாமல் வைப்பு நிதிகளைப் பெற முடியாது.
ஆகவே, இதுபோன்ற திட்டங்களுக்கு பணத்தைப் பெறுபவர்கள் தாங்கள் பெறக்கூடிய பணத்திற்கு இணையாக சில பொருட்களைத் தருவதாகச் சொல்கிறார்கள். அதன்படி, யூடியூப் விளம்பரத் திட்டத்தில் இணைபவர்களுக்கு ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்களும், மாத்திரைகளும் தரப்படுகின்றன.
ஆனால், இவற்றை வைத்து என்ன செய்வது என்பது கேள்விக்குறிதான். உதாரணமாக, 1,21,000 ரூபாய் கட்டி இணைபவருக்கு சுமார் 40 பெட்டி மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்த மாத்திரைகளின் உள்ளடக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
"மக்கள்தான் விளம்பர தூதர்கள்"
No comments