பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி' - பின்னணி என்ன? - விகடன் செய்தி :
ஆசிரியர்கள் போராட்டம்
எஸ்.தேவராஜன்
இது குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் பேசுகையில், "போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால் போராட்டத்தை தொடங்கும் முன்பாகவே போலீஸார் எங்களை கைது செய்கிறார்கள். இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும். தொடர்ச்சியாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்த அரசு செவி கொடுத்து கேட்பதில்லை. கடந்த முறை நாங்கள் போராட்டம் நடத்தியபோது 'எங்களின் 30 அம்ச கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என தொடக்க கல்வி இயக்குநர் உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இந்த ஒரு அரசாணையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஆசிரியைகள்தான். எனவே, இந்த அரசாணையை உடனே ரத்து செய்வதுடன், மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு அவர்களுடன் பேசி குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபக்கம் ஆசிரியர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மறுபக்கம் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இது நியாமான அணுகுமுறை இல்லை. குறிப்பாக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243- தான் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒன்றிய அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுத்து வருகிறார்கள்.
இந்த அரசாணையின் மூலம் மாநில அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுக்கிறார்கள். இதனால் ஒன்றிய அளவில் மூத்தவர்களாக இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பலருக்கு பதவி உயர்வு இல்லாமலேயே ஓய்வு பெரும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவேதான் பழைய முறையை கொண்டுவர என ஆசிரியர்கள் கேட்கிறார்கள். இது நிர்வாகத்தின் எளிமைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். கல்வி சார்ந்தோ, மாணவர்களின் நலன் சார்ந்தோ, சமூகத்தின் தேவைகளின் அடிப்படையிலோ நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் வேலைகளை கொடுக்க கூடாது. குறிப்பாக பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் வலைத்தளத்தில் ஏற்றும் வேலையை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு காலம் ஆகும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தால் கற்றல், கற்பித்தலில் எப்படி கவனம் செலுத்த முடியும். எனவே அரசு ஆசிரியர்களை தொந்தரவு செய்யக் கூடாது" என்றார்.
No comments