ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எண்ணெய் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை பலன் என்ன?
மற்ற மருத்துவ முறைகளில் குறிப்பிடப்படாத எண்ணெய் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை முறைகளை ஆயுர்வேதம் நிர்பந்திப்பது ஏன்?
அதனால் கிடைக்கும் பயன்கள் என்ன?
-சீதாராமன், காஞ்சிபுரம்.
நாம் பலவகையான உணவுகளை உண்கிறோம். உண்ணும் உணவின் சாராம்சம் இரு வகைகளாகப் பிரிகின்றன. ஒரு பிரிவு சத்தாகவும், மறுபிரிவு சக்கையாகவும் மாறிவிடுகின்றன. சத்தான பகுதி உடல் ஊட்டத்துக்காகவும், மற்றவை கழிவாகவும் வெளியேறுகின்றன.
கழிவாக வெளியேற வேண்டிய பகுதியின் தேக்க நிலை உருவானால், குடல், பிற உடல் உள்புறப் பகுதிகளிலுள்ள குழாய்களின் உள்புறச் சுவர்களில் படிவங்களாகப் படிந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. ரத்தக் குழாய்களின் உள்ளேயும் இதுபோன்ற அடைப்பு ஏற்பட்டால் பிராண வாயுவின் வரவும், கரிமில வாயுவின் வெளியேற்றமும் மந்தமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். இதனால் அணுக்களின் செயல்பாடும் மிகவும் தொய்வடைவதால், உடலில் நீர்த் தேக்கம், வாயுவின் ஓட்டத் தடை, உணவுச் சத்தின் போஷணையை பெற முடியாமை, பெருங்குடலில் மலத்தேக்கம், மூளையில் சுரப்பிகளின் ஒத்துழையாமை போன்ற நிலைகளை ஏற்படுத்திவிடும்.
ஆகாயத்தில் வெயில் காய்ந்து கொண்டிருத்தல், வயிறு பசியினால் சூடாகியிருத்தல், உடலில் தேய்க்கப்பட்ட வேண்டிய தைலம் சூடாக இருத்தல், வென்னீர் குளிப்பதற்காக காய்ந்து கொண்டிருத்தல், சீயக்காயை வென்னீரில் கரைத்தல் எனும் ஐந்து காய்ந்து கொண்டிருக்கும் நிலையில், உடலெங்கும் தைலத்தைத் தேய்த்து வென்னீரில் நீராடி சூடான சீயக்காயைத் தண்ணீரை குழைத்துத் தேய்த்துக் குளித்து, அன்றைய தினம், சூடான வீரியம் கொண்ட மிளகு, கடுகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ரசத்தை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளி, உப்பு, வரமிளகாய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட துவையலை ருசித்துச் சாப்பிடுவதன் மூலமாக குழாய்களின் உள்புறப் படிவங்கள் கரைகின்றன.
இந்தப் படிவங்கலின் வெளியேற்றத்தால் மந்தகதியில் செயல்பட்டு வந்த ரத்த ஓட்டம், அணுக்கள் வாயு, மூளைச் சுரப்பிகள் போன்றவை புத்துயிர் பெற்று மறுபடியும் தம் வேலைகளைச் செவ்வனே செய்யத் தொடங்குகின்றன.
அதனால் உடலில் எண்ணெய் தேய்த்து வெயிலில் அமர்ந்திருப்பது போன்ற சிகிச்சை முறைகளால் பலன் ஏதுமில்லை என்று சிலர் கூறும் கருத்தை நிராகரிக்க வேண்டும்.
மேலும், நோய் நிலைகளுக்குத் தக்கவாறு தேர்ந்தெடுக்கப்படும் மூலிகைத் தைலங்களால் உடல் உபாதைகளில் இருந்து குணப்படும் தன்மையானது மிகவும் எளிதாகிறது.
'ஸ்நேக- ஸ்வேதம்' எனும் தலைக் காப்பு- வியர்வை வரவழைத்தல் ஆகிய சிகிச்சைகளின் மூலமாக, நாம் உள்புற அழுக்குகளை மட்டும் நீக்கவில்லை. பசியை ஏற்படுத்தும் சுரப்பிகள் அனைத்தும் சீராவதால், சுரக்கும் திரவங்கள் வழிந்தோடும் வயிறு, குடலிற்கு வருவதால் உண்ணும் உணவின் சத்து, கழிவுகள், சிறப்பான முறையில் பிரிக்கப்பட்டு, சத்து போஷணத்திற்காகவும் கழிவு வெளியேறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் 'பஞ்சகர்மா' எனும் ஐந்து சுத்தி முறை சிகிச்சைகளால் பல உடல் உபாதைகள் நிச்சயம் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சை முறை சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
No comments