Breaking News

அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாளை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!

மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாளின் தொண்டு மகத்தானது!

முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆயி என்ற பூரணம். வங்கி ஊழியரான இவா், கொடிக்குளம் அரசுப் பள்ளி விரிவாக்கத்துக்காக தனக்குச் சொந்தமான ரூ.4.50 கோடி மதிப்பிலான 1.50 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கினாா்.

இதுகுறித்து அறிந்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், பூரணத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தாா். தற்போது அவரைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் பூரணம் அம்மாளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments