இனி பட்டா மாறுதல் ரொம்ப ஈசி! தாசில்தார் ஆபிஸுக்கு போகவே தேவையில்லை.. தமிழக அரசின் அசத்தல் செயலி
வீட்டில் இருந்தபடியே இனி பட்டா மாறுதல் செய்யலாம். இதற்காக தமிழக அரசு ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.
வீடுகளில், நட்பு வட்டாரங்களில் கிண்டலுக்காகவும், அக்கம்பக்கத்தினருடன் சண்டை நிகழும் போது கோபத்திலும் கேட்கப்படும் சொல் "இந்த இடத்தை நீ என்ன பட்டா போட்டு வச்சிருக்கியான்னா"
அந்த வகையில் பட்டா என்பது நிலத்தின் உரிமையை சொல்லும் ஒரு ஆவணமாகும். அதாவது இன்னார்தான் நிலத்தின் உரிமையாளர் என சொல்லும் ஒரு ஆவணமாகும். இந்த சான்று வருவாய்த் துறை வழங்குகிறது. நாம் வைத்திருக்கும் நிலங்களுக்கு உரிய பட்டா இருந்தால்தான் அந்த இடம் நமக்கு சொந்தம்.
அது போல் ஒரு இடத்தை விற்கும் போதும் வாங்கும் போதும் பட்டா யார் பெயரில் இருக்கிறது என்பதை அறியலாம். இந்த பட்டாவில் நிலத்தின் ஓனர் யார், நிலத்தின் சர்வே எண், இந்த நிலம் எந்த வகையை சேர்ந்தது, எந்த பகுதியில் அமைந்துள்ளது உள்ளிட்ட விவரங்களுடன் இந்த ஆவணம் தரப்படும்.
இந்த பட்டா ஆவணங்கள் கணினிமயமாகும்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிலங்களையும் விசாரணை செய்து அளந்து அதை கணினியில் ஏற்றினர். இந்த நிலையில் ஒருவரது சொத்தை வேறு ஒருவருக்கும் போது பட்டா மாறுதலுக்காக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்தது. இதனால் அலைச்சல் ஏதும் இல்லாமல் பட்டா மாறுதலை பெற முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும் பட்டா மாறுதல் கோருவோர் அனைத்து ஆவணங்களின் நகல்களையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அளிக்க வேண்டியதாக இருந்தது. இதனால் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் வீட்டில் இருந்தபடியே இணையத்தின் மூலம் பட்டா பெறும் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. பத்திரப்பதிவு துறையில் தற்போது பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் மூலம் பட்டா மாறுதல் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவரது சொத்தை மற்றவர்கள் கிரயம் செய்து முடிக்கும் போதே பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் அந்த சாப்ட்வேரில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஏற்கெனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரையம் முடிதச்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா?
சர்வே எண், உட்பிரிவு எண், கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையதள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக இருக்கிறதா? வில்லங்கம் ஏதும் உண்டா உள்ளிட்ட 5 கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும். பட்டா கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் பெயர் மாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் பத்திரப்பதிவின் போது கிரையம் செய்தவர், கிரையம் பெற்றவர் ஆகிய இரு தரப்பின் செல்போன் எண்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
கிரையம் முடித்தவர்கள் பட்டாவை eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இமெயில் முகவரி ஏதேனும் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த முகவரிக்கும் பட்டா அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறை உட்பிரிவு செய்யப்பட வேண்டியது இல்லை எனற சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதற்கான அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டிருந்தார். அது போல் தமிழ் நிலம் (Tamil Nilam) என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
No comments