Breaking News

தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் திட்டம்'. 'புதுமைப்பெண் திட்டம்'. - சிறந்து விளங்கும் உயர்கல்வித்துறை.

 


நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களினால் உயர் கல்வியில் குறிப்பாக மாணவிகளின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'உலக அளவில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றம் காண இன்றியமையாதது உயர்கல்வியாகும். அரசினால் வழங்கப்படும் உயர்கல்வியின் வாயிலாகவே இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தினையும் முன்னேற்றத்தினையும் கொண்டு வர இயலும் என்பதை கருத்தில் கொண்டு, திமுக தலைமையிலான ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித் துறையின் சார்பில் எண்ணற்ற நல்லபல திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் நான் முதல்வன் திட்டம், மாணவிகள் உயர்கல்வியினை தொய்வின்றித் தொடர மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம், மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் உங்களைத் தேடி உயர்கல்வி உள்ளிட்ட பல திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரத்திலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலம் தொடங்கி இன்று வரையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனின் அதிக அக்கறைக் கொண்டு குறிப்பாக கிராமப்புறங்களில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற்றிடும் வகையில், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு இலவசக் கல்வி, பட்டியலின மாணவர்களுக்கும் இலவசக் கல்வி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல திட்டங்களையும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து உருவாக்கியதன் பயனாக இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக்கழகங்களும் 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளும், அதிக அளவிலான மருத்துவக் கல்லுரிகளும், புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அமையப்பெற்று தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்கி தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களினால் உயர்கல்வியில் குறிப்பாக மாணவிகளின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, இடைநிற்றல் இன்றி உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் 6.9.2022 அன்று முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனடைகின்றனர். இந்தியாவிற்கே வழிகாட்டிடும் இந்த புதுமைப் பெண் திட்டத்தினால் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக் ஒன்றாகும்.

இன்றைய இளைஞர்களின் கனவினை நிறைவேற்றுகின்ற வகையில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையில் உதித்தத் திட்டமே நான் முதல்வன் திட்டமாகும். தமிழ்நாட்டின் உயர்கல்வியின் மாணவர் சேர்க்கையினை அடுத்த வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 100 சதவிதம் இலக்கினை எட்ட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கில் உதித்த இந்த திட்டத்தின் வாயிலாக, உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை குழுவின் மூலம் வழங்கி வழிகாட்டுதல், மாணவர்கள் தங்களின் சொந்த ஆர்வங்களையும் திறன்களையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்தல். மேலும், பட்டப்படிப்பு முடிக்கும் வரை தடையற்ற உயர்கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

அந்த வகையில் கடந்த 2022-ல் முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக இதுவரையில் 27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் பயிற்சி பெற்ற 1 லட்சத்து 84 ஆயிரம் இளைஞர்களில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்று மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது இத்திட்டத்திற்கான மாபெரும் வெற்றியாகும்.

உயர்கல்வி நிறுவனங்களை உயர்சிறப்பு மையங்களாகத் தரம் உயர்த்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழில் துறைக்குத் தேவையான திறன்மிகு பணியாளர்களை உருவாக்குவது மட்டுமின்றி, நவீன அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கும் இது வழிவகுக்கிறது. தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்த 4.0 தரநிலையை எய்திடும் பொருட்டு 3,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில்பாடத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் முன்னோடித் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.

ரூபாய் 7.5% சிறப்பு உள் இடஒதுக்கீட்டின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் 28,601 அரசுப் பள்ளியில் பயின்ற மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இம்மாணாக்கர்களுக்கான கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றிற்காக ரூ.213.37 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு மாணவர்கள் கல்வி தொடர வழிவகை செய்துள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை பெற்றுள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்கள் தொடர்ந்து உயர்கல்வியினைத் தொடர ஆண்டுதோறும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகையாக ரூ.1,000/- கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 10.000 மாணாக்கர்கள் தேர்வுச் செய்யப்பட்டு அவர்களின் தொழில்நுட்ப பயிற்சியினை மேம்படுத்திட தொடர்ந்து 25 நாட்களுக்குத் தொழிலக உட்பயிற்சி வழங்கிடும் பொருட்டு, தலா ஒரு மாணாக்கருக்கு ரூ.16,600/- வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழிலக உட்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அந்த நிறுவனத்திலேயே அவர்கள் வேலை பெறும் வாய்ப்பினையும் பெறுகிறார்கள்.

பிற மொழிகளை கற்பதில் ஆர்வமுள்ள மாணக்கர்களில் வேலைவாய்ப்பு மற்றும் போதுமான கல்வியினைப் பெற்றிடும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணக்கர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகள் கற்றுத் தரப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,200 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணாக்கர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்துகின்ற வகையில், முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையில் உதித்தத் திட்டமே ஆராய்ச்சி மானியத் திட்டமாகும்.

கடந்த 2023-2024 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் ரூ.50 கோடி பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் பயனாக, மாணவர்களிடம் ஒளிந்துள்ள புதுமையான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், வணிக மாதிரிகள் மற்றும் புதிய தொழில்நுட்ப தயாரிப்பு முறைகளை ஊக்குவிக்கவும், தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை தயாரித்து வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டு, நாளது வரையில் 1,960 ஆராய்ச்சி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில் மேம்படுத்திட ரூ.1000 கோடிக்கு நிருவாக அனுமதி வழங்கப்பட்டு முதற்கட்டமாக, 2022-23-ம் ஆண்டிற்கு ரூ 250 கோடியும். 2023-24ம் ஆண்டிற்கு ரூ.200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்லூரிகளுக்குத் தேவையான கூடுதல் கட்டடங்கள், புதிய கல்லூரிகளை கட்டுதல், ஆய்வகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 10 இஸ்ரோ விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக தலா 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளார்.

உயர்கல்வித் துறையில் நிறுவன வள திட்டமிடல் மற்றும் மென்பொருளுடன் கூடிய ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பினை (LMS & ERP) ரூ.150 கோடி செலவில் உருவாக்கி, 14 அரசுப் பல்கலைக்கழகங்கள். கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றில் டிஜிட்டல் மாற்றத்தினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை மாணவர்களின் கல்வி பாதிக்காவண்ணம் தொகுப்பூதிய அடிப்படையில் 1,750-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் 27 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கல்லூரிகள் முதலமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன. மேலும், 2 கல்லூரிகளில் கட்டடப் பணிகள் முடியும் தருவாயிலும், 23 கல்லூரிகளில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

சென்னை, மாநிலக் கல்லூரியில் 5,564 சதுர மீட்டர் பரப்பளவில் ஏறத்தாழ 2000-க்கும் மேற்பட்ட நபர்கள் அமரக்கூடிய வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் மாபெரும் நவீன அரங்கம் (Auditorium) 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டு வருகிறது

தமிழ்நாட்டு மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் 'Chief Minister Research Fellowship' 'முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை' திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 120 மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையில் உதித்த பல்வேறு உன்னதத் திட்டங்கள் உயர்கல்வித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக, இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதோடு மட்டுமின்றி; ஏனைய பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது'

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments