Breaking News

Diabetes: இந்த 4 பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா சர்க்கரை நோய் சீக்கிரம் வந்துடும்...

 

Diabetes: இன்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.

சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது அல்லது உடலால் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத போது ஏற்படுகிறது.

இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது இரத்த சர்க்கரையை சீராக்குகிறது. இதில் ஹைப்பர்கிளைசீமியா என்பது இரத்த சர்க்கரை அதிகரிக்கும் நிலையாகும். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் போது, அது உடலின் பல்வேறு பகுதிகளை தீவிரமாக சேதப்படுத்தும். சொல்லப்போனால் இந்த சர்க்கரை நோய் தான் சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

முன்பெல்லாம் சர்க்கரை நோயானது 40-50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வந்தது. ஆனால் தற்போது சர்க்கரை நோய் இளம் வயதிலேயே ஒருவரை பாதிக்கிறது. இப்படி இளம் வயதில் சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது தான்.

எனவே சர்க்கரை நோய் வரக்கூடாது என்று விரும்பினால், உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களை கவனித்து அவற்றை மேம்படுத்த வேண்டும். கீழே சர்க்கரை நோய் வரக்கூடாதெனில் எந்த மாதிரியான பழக்கங்களை ஒருவர் அறவே தவிர்க்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

1. உணவு உண்டதும் தூங்குவது

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் சர்க்கரை நோயை ஒருவர் திறம்பட நிர்வகிக்கலாம். ஆனால் உணவு உட்கொண்ட உடனேயே தூங்குவது மிகவும் மோசமான பழக்கமாகும். இப்படி உணவு உட்கொண்டதும் தூங்கும் போது, உணவுகள் சரியாக ஜீரணிக்கப்படாமல் போவதோடு, சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே சர்க்கரை நோய் வரக்கூடாதெனில் உணவு உட்கொண்ட பின் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து தூங்க வேண்டும்.

2. இரவு தாமதமாக உண்பது

தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்கிறார்கள். உங்களிடம் இப்படியான பழக்கம் இருந்தால், உடனே அதை தவிர்த்திடுங்கள். இரவு தாமதமாக உணவை உட்கொண்டால், உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாமல் போகும். இப்படி உணவு ஜீரணிக்கப்படாமல் வயிற்றிலேயே இருந்தால், அது பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வரும். முக்கியமாக இப்படியான பழக்கம் மாரடைப்பு அல்லது சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே முடிந்த வரை இரவு உணவை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்.

3. சர்க்கரை மற்றும் மாவு உணவுகளை உண்பது

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, மாவு, க்ளுட்டன் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உணவுகளை அறவே தொடக்கூடாது. இந்த வகையான உணவுகளை உட்கொண்டால், அவை சர்க்கரை நோயை தீவிரப்படுத்திவிடும். ஏனெனில் இந்த உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே இப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4. உண்ட பின் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது

உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது அல்லது சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்பினால், உடலுழைப்பில்லாத வாழ்க்கையை வாழ்வதைத் தவிர்க்க வேண்டும். தற்போது நிறைய பேர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். இப்படியான நிலையில் இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம். இரத்த சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும்?

* உடற்பயிற்சி

இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சிறந்த வழி தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது தான். உடலுக்கு தினமும் போதுமான வேலையைக் கொடக்கும் போது, இன்சுலின் உணர்திறன் மேம்படும், இரத்த சர்க்கரை அளவு குறையும் மற்றும் உடல் எடை சீராக பராமரிக்கப்படும்.

* ஆரோக்கியமான டயட்

சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு சர்க்கரை நோயாளிகள் நற்பதமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* மன அழுத்தத்தைக் குறைக்கவும்

நாள்பட்ட மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவில் மோசமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த அல்லது நிர்வகிக்க மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு தியானம், ஆழமான மூச்சுப்பயிற்சி, யோகா மற்றும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

* நீர் அதிகம் அருந்தவும்

உடல் போதுமான நீரேற்றத்துடன் இருந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் மற்றும் இரத்த சர்க்கரையும் சீராக இருக்கும். அதற்கு வெறும் நீரை மட்டும் குடிக்காமல், மூலிகை டீ, கசாயம் மற்றும் ஆரோக்கியமான பானங்கள் ஆகியவற்றை குடிக்க வேண்டும்.

No comments