Breaking News

நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 3 விஷயங்கள் அவசியம்: உடனே தெரிஞ்சிக்கோங்க

 


கடந்த சில தசாப்தங்களாக நீரிழிவு நோய் உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அதுவும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.

இந்தியா நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுதும் அதிலிருந்து நிவாரணம் பெற முடியாது. எனினும், முறையான சிகிச்சை மற்றும் உணவு கட்டுப்பாடுகளின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக நோய், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது. இது குறித்து மருத்துவர் இம்ரான் அகமது சில முக்கிய தகவல்களை அளித்துள்ளார். நீரிழிவு நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள விரும்புபவர்கள் அன்றாட வாழ்க்கையில் தங்களது சில பழக்கங்களை மாற்ற வேண்டும் என அவர் கூறுகிறார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீரிழிவு நோயை விரட்டி அடிக்க இந்தப் பழக்கங்களை மாற்றவும்

நீரிழிவு நோய் ஏற்பட மரபணு காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பொதுவாக இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. ஆகையால், உடலில் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) அதிகரித்து, நீரிழிவு நோய் வராமல் இருக்க, உங்கள் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை செய்வது அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.

தூக்கமின்மை

ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிலனா தூக்கம் இல்லாம்ல போனால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நீரிழிவு நோயும் அவற்றில் ஒன்றாகும். குறைவான தூக்கம், பசியைக் கட்டுப்படுத்தி இரத்த குளுக்கோஸை பராமரிக்கும் ஹார்மோன்களின் விளைவைக் குறைக்கிறது. தூக்கமின்மை முதலில் உடல் பருமனை அதிகரிக்கும். அதன் பிறகு அது நீரிழிவு அபாயத்தை உருவாக்கும்.

காலை உணவை தவிர்ப்பது

இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு உண்ணவும் நேரமில்லை, உறங்கவும் நேரமில்லை. குறிப்பாக, நேரமின்மை காரணமாக காலை உணவை பலர் தவிர்த்து விடுகிறார்கள். இது மிகவும் தவறான விஷயமாகும். பலர் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அவசர அவசரமாக கிளம்பும் வேளையில் காலை உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் இது நம் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். ஆகையால் தவறுதலாக கூட காலை உண்வை தவிர்க்கும் தவறை செய்ய வேண்டாம்.

காலை உணவை தவிர்ப்பவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. காலை உணவைத் தவிர்ப்பதால், மதிய உணவு வரை நீங்கள் பசியுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகள் சமநிலை இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றன.

இரவு உணவுக்குப் பின் சாப்பிடும் பழக்கம்

இரவில் தாமதமாக சாப்பிடுவதும், பல்வேறு பானங்களை குடிப்பதும் இரத்த சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியமான காரணமாக உள்ளது. முதலில், இரவு உணவில் ஆரோக்கியமானவற்றையே உட்கொள்ள வேண்டும். இரவு உணவு உட்கொண்ட பின்னர், சிறிது நேரம் கழித்தோ, அல்லது நள்ளிரவிலோ ஏதாவது சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக விட்டு விடுங்கள்.

நம்முடைய உணவு முறைகளும், உணவு உட்கொள்ளும் நேரமும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதில் பெரிய பங்கு வகிப்பதாக பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இன்சுலின் சுரப்பும் நின்றுவிடும். இரவில் தாமதமாக பசி எடுத்தால், ஆரோக்கியமற்ற சிப்ஸ் அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக, உலர் பழங்களை சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்த வேளைகளில் இனிப்பு பண்டங்களையும் கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாது.

No comments