Breaking News

நேரடியாக இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. "நம்பிக்கையோட கிளம்புங்க"! உடனே போராட்டத்தை கைவிட்ட ஜாக்டோ ஜியோ

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமிப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதியான நாளை தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். அதன்பிறகு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வேண்டுகோளை ஏற்பதா வேண்டாமா என்பது பற்றி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையின் முடிவில் அமைச்சரின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்க மறுத்துள்ளது. திட்டமிட்டபடி, நாளை (பிப்ரவரி 15) அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், அவர்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஜாக்யோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை தொடர்ந்து நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்யோ ஜியோ அமைப்பினர், "கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதலமைச்சரே அழைத்துப் பேசியுள்ளதால் எங்களுடைய நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை. முதல்வரை சந்தித்து கோரிக்கையை வைத்தோம். நிதி நிலைமை சீரானதும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லுங்கள் என்றார். அதன் அடிப்படையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.


No comments