Breaking News

SUNDAY-வில் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு சூப்பரான செய்தி-இது கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் என்ன வித்தியாசம் ?

 


மீன் வறுவல், மீன் குழம்பு, புட்டு என மீன் சமைப்பதிலேயே பல வகைகள் உண்டு. கடல், ஆறு, ஏரி, குட்டை என பல இடங்களில் மீன்கள் இருக்கும்.

ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு தனிச்சுவை உண்டு. அதேபோல் இவற்றில் வித்தியாசம் என்னவென்று கேட்டால் அதன் சுவையும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் தான்.

பொதுவாகவே மீன் இறைச்சியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். கடல் மீன்கள் முதல் ஆற்று மீன்கள் வரை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நீர் மட்டங்களில் இந்த மீன்கள் வளர்ந்தாலும், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். சாதாரணமாக மீனில் புரதச்சத்து அதிகமாகவும் கொழுப்புச்சத்து குறைவாகவுமே இருக்கும். இதனால் மீன் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவென்று சொல்லலாம்.

ஆனால் ஆற்று மீன்களுக்கும் கடல் மீன்களுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் வளரும் மீன்கள் பொதுவாக புழுக்கள் மற்றும் பூச்சிகளை உண்டு வளரக்கூடியவை. ஆனால், கடல் மீன்கள் எல்லாம் கடல் பாசிகளையே முக்கிய உணவாக எடுத்துக்கொள்கின்றன. இது போன்ற கடல் பாசிகளை உண்டு வளர்வதால் கடல் மீன்களில் ஒமேகா -3 ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கும்.

இந்த கடல் பாசிகள் அனைத்தும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்களால் நிறைந்தவை. எனவே, இவற்றை உண்ணும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 ஊட்டச்சத்து கண்டிப்பாக இருக்கும். அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பெரிய மீன்களை விட சிறிய மீன்களில் தான் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து இருக்கும். உதாரணமாக, கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஊட்டச்சத்து அதிகம் இருக்கும்.

இப்போது இந்த ஒமேகா-3 உடலுக்கு நல்லதா இல்லையா என்ற ஒரு கேள்வி உங்களுக்கு இருக்கும். அதைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். ஒமேகா-3 ஊட்டச்சத்து உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலில் இரத்த உறைவு பிரச்சினை ஏற்படாமல் கவனித்துக்கொள்கிறது. அது மட்டுமில்லாமல் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கும் இந்த ஒமேகா-3 மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்து தான் மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் நாற்றம் அடிப்பதாலும் அதிக முள் இருப்பதாலும் மத்தி, சங்கரா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்த மீன்களை பெரும்பாலான மக்கள் உணவில் சேர்ப்பதைத் தவிர்க்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால், பெரிய மீன்களை விட இதில் தான் அதிக சத்துக்களே உள்ளது. ஆற்று மீன்களுடன் ஒப்பிடும்போது கடல் மீன்கள் சற்று உப்புத்தன்மை வாய்ந்தவை என்பது உண்மைதான் என்றாலும், அவை ஒருபோதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது என்பதும் உண்மைதான்.

ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சி சாப்பிடும் போது பலரும் குறிப்பிட்ட அளவு சாப்பிட வேண்டும், ஏனெனில் கொழுப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், மீன் இறைச்சியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளும் இல்லாததால், எல்லா வயதினருக்கும் மீன் ஒரு சிறந்த உணவு என்று சொல்லலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்க பால் சுறா மற்றும் நெய் மீன் போன்ற மீன்களை உணவாக எடுத்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும். அது மட்டுமில்லாமல் மீன் உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கண்பார்வையையும் மேம்படுத்தும்.

சிலருக்கு சில வகையான மீன்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் அனைத்து வகையான மீன்களையும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரத்தில் குறைந்தது இரண்டு வேளையாவது உங்கள் உணவில் மீன் இறைச்சியையும் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை சேர்ப்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.

No comments