Breaking News

நைட் பிரஷ் பண்ணமாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருக்காம்.. உஷார்..

 

வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் சாப்பிடும் உணவுகள் வாயின் வழியாகத் தான் உடலினுள் செல்கின்றன.

எனவே வாயில் நிறைய அழக்குகள் சேரவும், தொற்றுகள் ஏற்படுவதற்குமான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன. வாயின் ஆரோக்கியத்தை புறக்கணித்தால் அது பற்கள் மற்றும் ஈறுகளை மோசமாக பாதிப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

சமீபத்திய ஆய்வுகளின் படி, தினமும் இரவு நேரத்தில் பற்களை துலக்காதவர்களுக்கு உயிரைப் பறிக்கக்கூடிய மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் தினமும் இரண்டு முறை பற்களை துலக்காதவர்களுக்கு, தினமும் இருமுறை பற்களை துலக்குபவர்களை விட மாரடைப்பால் மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசமான வாய் சுகாதாரம் எப்படி மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கிறது?

வாய் சுகாதாரத்திற்கும், இதயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் யோசிக்கலாம். அதுவும் வாய் சுத்தமாக இருந்தால், அது எப்படி மாரடைப்பினால் ஏற்படும் மரணத்தில் இருந்து பாதுகாக்கும் என்று கேட்கலாம். பொதுவாக மாரடைப்பானது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் அல்லது கொழுப்பு லேயர்கள் உருவாகி, இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தில் தடை உண்டாவதால் ஏற்படுகிறது.

இதய தமனிகளில் உள்ள ப்ளேக்குகள் சிதைந்தவுடன், இரத்த குழாய்களில் உள்ள பிசுபிசுப்பான கொழுப்புக்கள் வெளியே வந்து, பிளேட்லெட்டுகளை ஈர்த்து, இரத்த உறைவு ஏற்படத் தூண்டுகிறது. இப்படி இரத்த உறைவு ஏற்பட்டால், அது தமனியில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்தம் முன்னோக்கி செல்வதைத் தடுத்துவிடும். மேலும் அந்த தமனியுடன் இணைந்துள்ள இதயத்தின் பகுதி இறக்கத் தொடங்கும். மோசமான வாய் சுகாதாரம் இதை பல வழிகளில் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

* சரியாக பற்களைத் துலக்காமல் இருந்தால், அது பற் சிதைவை ஏற்படுத்துகிறது மற்றம் ஊட்டச்சத்து உட்கொள்ளலை பாதிக்கிறது.

* ஒருநாளைக்கு இரண்டு வேளை பற்களை துலக்காமல் இருந்தால், அது குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களில் சமநிலையின்மையை ஏற்படுத்தி, அதன் விளைவாக வீக்கம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவது தூண்டப்படலாம்.

* பற்களில் இருக்கும் ப்ளேக்குகள் ஈறு நோய்களை உண்டாக்கி, உடலில் நாள்பட்ட அழற்சி நிலையை ஏற்படுத்தும். இந்த அழற்சியானது பீரியண்டால்ட் லிகமெனட் மற்றும் அல்வியோலர் எலும்பு உள்ளிட்ட துணை திசுக்களின் அழிவுக்கு வழிவகுத்துவிடும். மேலும் ஈறு அழற்சிக்கு காரணமான அதே பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து, பெருந்தமனி தடிப்பு அழற்சியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, குடல் பாக்டீரியாக்களில் சமநிலையின்மை மற்றும் நாள்பட்ட அழற்சி போன்றவைகள் தான் ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை துலாக்காதவர்களுக்கு மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?

வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி, இதய நோயின் அபாயத்தில் இருந்து தப்பிக்க ஒருசில பழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தாலே போதும். அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

* முதலாவதாக, தினமும் தவறாமல் காலை, இரவு என இரண்டு வேளைபற்களைத் துலக்க வேண்டும். அதுவும் ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டு. அதோடு தினமும் பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை நீக்க ப்ளாஷ் செய்ய வேண்டும்.

* பற்களில் சொத்தை இருந்தாலோ அல்லது ஈறு நோய்கள் இருந்தாலோ, மருத்துவரை அணுக தாமதிக்க வேண்டாம். சீரான இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பற்களை சோதனை செய்வதோடு, பற்களை சுத்தம் செய்யவும் வேண்டும்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் நுரையீரலுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை, ஈறுநோய்கள் மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே இப்பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

* ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து, எப்போதும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது வாய் ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் ஆதரவளிக்கும்.

No comments