இடைநிலை ஆசிரியர்கள் கைது - தினகரன் கடும் கண்டனம்
சமவேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் தமிழக காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சமவேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் தமிழக காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் 311 வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஊதிய முரண்பாடை களைய குழு அமைக்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நம்பி ஆசிரியர்கள் களைந்து சென்றனர்.
அரசு அமைத்த குழுவுக்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னரும் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக்கூறி கடந்த மூன்று நாட்களாக நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சர்வாதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
பொய்யான வாக்குறுதிகளின் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்பதற்கு பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து மற்றும் மின்வாரிய ஊழியர்கள் என நாள்தோறும் நடைபெறும் போராட்டங்களே சாட்சி.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிப்பதோடு, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
No comments