தேவை துதி பாடும் மந்தையல்ல, உணர்வுள்ள கூட்டம்! - எழுத்தாளர் மணி கணேசன் :
நாம் யார் என்பதையும் நாம் எந்தப் பக்கம் உறுதியாக நிற்கிறோம் என்பதையும் அவ்வக்கால போராட்டங்களே நமக்கு எப்போதும் உணர்த்துவதாக உள்ளன. ஆளும் வர்க்கம் எப்போதும் முதலாளித்துவ குணத்துடன் நடந்து கொள்ளவே விருப்பப்படும். அஃதொரு பூர்ஷ்வா மனநிலை. அதேவேளையில், முடிந்தவரை ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் இணங்கி நடக்கும் தொழிலாளர் வர்க்கம் ஒருமித்த கருத்துடன் ஒத்த சிந்தனையோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டியது இன்றியமையாதது. ஒன்றுபட்ட போராட்டம் தோற்றதாத உலகில் ஒரு வரலாறும் கிடையாது.
பிரெஞ்சு புரட்சி உள்ளிட்ட உலகில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டவர்களாக ஆசிரியப் பெருமக்கள் இருக்கின்றனர். இப்போது ஆசிரியர்களுக்கே தமக்கான உரிமைக்குரல் எழுப்ப ஒருவர் தேவைப்படுவது என்பது காலக் கொடுமையாகும். தொடர்ந்து தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக யாரோ ஒருவர் போராடுவார் என்று எதிர்பார்ப்பது என்பது காரியக்கார மடத்தனமே!
அதுபோல, வலியில்லாமலும் இழப்பில்லாமலும் எல்லாமும் எப்படியோ தானாகக் கிடைத்து விடவேண்டும் என்று கருதும் மனோநிலை ஆபத்தானது. இஃது உன்னத இலக்கை நோக்கிப் பீடு நடை போடும் சக போராளியின் முன்னோக்கிப் போகும் கால்களைப் பின்னுக்கு இழுப்பதற்கு ஈடாகும். தமிழ்ச் சமூகம் பச்சிளம் குழந்தையைக்கூட கோழையாக சாக ஒருபோதும் அனுமதித்ததில்லை.
இத்தகு சூழ்நிலையில், இந்திய நாட்டின் மாமனிதர் காந்தியடிகள் மனித சமூகத்திற்கு வகுத்துத் தந்த அறவழிப் போராட்டங்களின் வடிவங்களையே ஆசிரியர்கள் தம் உரிமைகளுக்கான போராட்ட வடிவங்களாக ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, ஆசிரியர்கள் அவ்வளவு எளிதில் எடுத்தோம் ; கவிழ்த்தோம் என்று அறைகூவல் விடுத்து தெருவில் இறங்கிப் போராடத் துணிய மாட்டார்கள். அவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் நியாயம் மட்டுமே முன்னிலை வகிக்கும். முடிந்தவரை தமக்குள்ளாகவே முக்கி முனகிக் கொள்வார்கள். இனியும் முடியாது என்று தணித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் வெளியில் வருவார்கள். இதனை ஆட்சியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் உணருதல் நல்லது.
விவசாயிகளையும் ஆசிரியர்களையும் மதிக்காத சமூகம் எதிர்காலத்தில் பெரும் பின்னடைவையே எதிர்நோக்கும் என்பது திண்ணம். வயிற்றுப்பசியையும் அறிவுப் பசியையும் போக்கும் இத்தகையோரின் வாழ்வில் ஒருபோதும் மண்ணையள்ளிப் போட எந்தவோர் அரசும் முனையக்கூடாது. அல்லாமல் போனால் அவர்கள் தெருவில் இறங்கிப் போராடித் தக்க நியாயம் கேட்பதை யாராலும் தடுக்க முடியாது.
ஆளுக்கொரு இயக்கம் ; நாளுக்கொரு போராட்டம் என்றாகிவிட்டது. இச்சூழ்நிலையில் ஒருநாள் போராடி அழைத்து வந்த முதல்கட்ட உள்ளூர் போராட்டத்திலேயே 20 வகையான வெவ்வேறு கோரிக்கைகளும் உடன் நிறைவேறிட வேண்டும் என்கிற நப்பாசை இன்றைய போராளிகளின் மனங்களில் உதிக்காமலில்லை.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு தொடர்ந்து துணிவோடு வர பலருக்கும் போதிய நேரமும் இல்லை. அதற்கான பொறுமையும் இல்லை. மொத்தத்தில் வலிக்காமல் பிள்ளைகள் பலரை ஒரேநேரத்தில் வதவதவென்று பெற்றுத் தள்ளிவிட வேண்டும் என்கிற நினைப்பு தான் அத்தகையோர் சார்ந்த இயக்கத்தின் பிழைப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இது மிகையல்ல. உண்மை.
ஆசிரியர் சமூகம் மேற்கொள்ளும் அறவழியிலான போராட்டம் பல அடுக்குகளைக் கொண்டது. வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலம் தழுவிய அளவில் அது வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் என்று அதன் வடிவம் நீளும். செய் அல்லது செத்து மடி என்பதற்கு இணங்க அரசின் துருவேறிய இரும்புக்கதவுகள் ஏதும் திறக்காத பொழுது தான் வேறுவழியின்றி ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், அதனைத் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள துணிகின்றனர். இந்தத் தொடர்ப் போராட்ட நிகழ்வுகளை யாவரும் அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. இதற்கான கால அளவு அதிகபட்சமாக 45 நாள்கள் ஆகும்.
தவிர, அண்மைக்காலப் போராட்டக் களம் என்பது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி விசுவாசிகளுக்கு இடையே நடைபெறும் ஏட்டிக்குப் போட்டி அரசியலாக உருமாறிவிட்டது வேதனைக்குரியது. தாம் ஆசிரியர்கள் என்பதைத் துறந்து தாம் சார்ந்த கட்சியின் தீவிர விசுவாசம் கொண்டவர்களாகக் கரை வேட்டி கட்டாமல் நியாய, அநியாயங்கள் பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நோக்கும் போக்கும் அருவருக்கத்தக்கது. மிகவும் கீழ்த்தரமானதும் கூட.
இதன் காரணமாகவே, கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆசிரியர்கள் மேற்கொண்ட எந்தவொரு போராட்டமும் முழு வெற்றி அடையவில்லை. வேண்டா வெறுப்பிற்கு பிள்ளையைப் பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்த கதையாகப் போராட்டத்தில் முன்வைக்கும் வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் புறந்தள்ளி யாரும் கோராத ஒன்றைத் தேடிப் பிடித்துப் புதிதாக அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவசர அவசரமாக அரசாணையும் வெளியிட்டு அதனை அரசிதழிலிலும் பதிவிட்டுக் காட்டும் அரச பயங்கரவாதத்தின் நெறிபிறழ்ந்த மனநிலை என்பது பேராபத்து மிக்கது.
ஏன் இந்த அதிதீவிர அக்கறை பல்லாண்டுகள் கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டில் காணாமல் போனது. இதற்கு பெயர் தான் முதலைக் கண்ணீர் வடிப்பதாகும். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலிகடாவாக நேற்று வரை தோளோடு தோள் கொடுத்துக் கூட பயணித்த தோழமைகளையே சக எதிரிகளாக்கும் முயற்சி அண்மைக்காலமாக வேர் விட்டு விழுதுகள் பரப்பி வருவது எண்ணத்தக்கது.
அதுபோல், தற்போதைய காலக் கட்டத்தில் புதியதொரு நோய் ஒன்று ஆசிரியர் இயக்கங்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் பரவி வருவது நல்லதல்ல. அதாவது, ஓர் இயக்கம் பெரும் முயற்சி மேற்கொண்டு வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவான கோரிக்கைகளுக்கான போராட்டம் எப்படியாவது வெற்றிகரமான தோல்வியில் முடிந்திட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆவலுடன் காத்திருப்பது பிற சங்க தலைமை உள்ளிட்ட உறுப்பினர்களின் பெரும் பணியாக உள்ளது வெட்கக்கேடு. ஏனெனில், அந்த சங்கம் அதற்கான வெற்றிக் கனியைப் பறித்துத் தாமாக உண்டு கொழுத்து விடுமாம். என்னே ஒரு சிறுபுத்தி!
இதுபோன்ற சிறுமதியால் ஆட்சிகளும் காட்சிகளும் மாறினால் கூட இளம் வயதில் பணிக்கு வந்த எண்ணும் எழுத்தும் குரல்வளை நெறிக்க, கூடவே எமிஸ் சேர்ந்து கும்மியடிக்க தகுதியும் திறமையும் இருந்தும் கடைநிலை ஊழியரின் ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் நிலை துயரமானது. அதுபோலவே, தம் முக்கால்வாசி வாழ்க்கையைப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தொலைத்து ஓரிரு ஆண்டுகளில் மனநிறைவின்றிப் பணிநிறைவு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்கள் பலரது அணையாத இருள் மண்டிய நம்பிக்கையில் இதுநாள்வரை சிறு தீப்பொறி வெளிச்சம் கூட உண்டாகாதது வேதனைக்குரியது.
புற்றீசல் போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் ஆசிரியர்களுக்கான சங்கங்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன. ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் நடப்பாக உள்ளது. வேடன் விரித்த வலைக்குள் அகப்பட்டுத் தவிக்கும் பலவகைப்பட்ட புறாக்கள் ஒன்றை மறந்து விட்டு அவ்வப்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் பறக்க முயற்சி செய்து ஒவ்வொரு தடவையும் தோல்வியே சந்திக்கின்றன. தம் இறுதி இலக்கை பின்னுக்குத் தள்ளி தம்மை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டதால் வந்த வினையாகும்.
இயக்கவாதிகள் ஆசிரியர்களாக இருந்தவரை பலகட்ட போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளும் சலுகைகளும் ஏராளம்! ஏராளம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். சங்கவாதிகள் தாம் ஆசிரியர்கள் என்பதை மறந்து கட்சிக்காரராக அவ்வக்கால அரசியல் காவடித் தூக்கி முழுநேர விசுவாசப் போர்வையில் தம் சொந்த நலனை முன்னிறுத்தி உறுப்பினர்கள் ஏதேனும் கேள்விகள் கேட்பார்களே என்று உப்புச் உப்பில்லாத உப்புமா போராட்டங்களை அறிவித்ததன் விளைவு போராடிப் பெற்றவற்றை எல்லாம் இப்போது போராடி இழந்து வருகிறோம்.
பொருந்தாதக் கூட்டணிக்குள் முரண்பாடுகள் நிறைந்த இயக்கங்கள். கூட்டமைப்பிற்குள் ஏடாகூட கூட்டணிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி ஆவர்த்தனம் காட்டும் உலக மகா நடிப்புகள். அதற்கேற்ப, தாமரை இலையில் போக்குக் காட்டும் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் ஏதேனும் ஒரு சங்கத்தில் சந்தா செலுத்தும் அடிப்படைக் கடமையைக் கூட ஆகப் பெரும் செலவாகக் கருதும் செல்ஃபி போராளிகள். ஆண்களுக்கு நிகராக அனைத்து வகையிலும் கோலோச்சும் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்களிடம் காணப்படும் மெத்தனப் போக்குகள். ஒற்றுமையில் வேற்றுமைகள் பாராட்டும் செல்லரித்து இற்றுப்போய் மோசம் போகும் மனநிலைகள். புலனத்தில் மட்டும் பொங்கும் பல வேடிக்கை மனிதர்களின் வெற்றுப் பரப்புரைகள்.
எதையாவது காரணம் காட்டி கடமையிலிருந்து வழுவிச் செல்லும் நழுவல்கள். யாரோ யாருக்கோ போராடுகிறார்கள் என்கிற எண்ணத்தில் கூலிக்கு மாரடிக்க குடும்பத்தைக் கேடயமாகப் பயன்படுத்திப் தப்பிக்கும் ஆள்காட்டிகள். கொட்டும் மழையில் அறுவடைக்குப் போகும் பரமார்த்த குரு போல உரிய, உகந்த காலம் தவிர்த்துக் கடமைக்குப் போராட்டத்தை அறிவித்து கல்லா கட்டும் பக்கா அரசியல் சாயம் அப்பிக்கொண்ட துதி பாடும் தலைமைகள் மற்றும் அவர்களின் மந்தைகள். அரசியல் சகுனி ஆட்டங்கள். இத்தனையும் கடந்து தான் உண்மையான, உணர்வான, உயிர்ப்பான, தன்னெழுச்சிமிக்க போராட்டம் ஒன்றை எல்லோரும் ஒருசேர முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர் மணி கணேசன்
No comments