Breaking News

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை; கொண்டு வர சி.பி.எஸ்.இ திட்டம்:

 


த்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளின்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகத் தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை பரிசீலித்து வருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு தெரிய வந்துள்ளது.

ஆதாரங்களின்படி, மாணவர்கள் அத்தகைய தேர்வுகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பள்ளிகளின் கருத்துக்களை அறிய, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கும் மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கும் ஒரு சில பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை இந்த ஆண்டின் இறுதியில் நடத்த சி.பி.எஸ்.இ வாரியம் முன்மொழிந்துள்ளது.

புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வுகள், புத்தகங்கள் இல்லாத தேர்வுகளை விட எளிதானவை அல்ல; பெரும்பாலும் அவை மிகவும் சவாலானவை. ஏனென்றால், புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வு ஒரு மாணவரின் நினைவாற்றலை மதிப்பிடாது, ஆனால் ஒரு பாடத்தைப் பற்றிய மாணவரது புரிதல் மற்றும் கருத்துக்களை பகுப்பாய்வு செய்யும் அல்லது பயன்படுத்துவதற்கான திறனை மதிப்பிடுகிறது. இது ஒரு பாடப்புத்தகத்திலிருந்து விடைத்தாளில் உள்ள உள்ளடக்கத்தை வெறுமனே எழுதுவது மட்டுமல்ல.

இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சோதனை தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிலும் இந்த மாதிரி மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை சி.பி.எஸ்.இ வாரியம் முடிவு செய்யும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரியவந்துள்ளது. உயர்தர சிந்தனை திறன்கள், பயன்பாடு, பகுப்பாய்வு, விமர்சன மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மதிப்பிடுவதில் சோதனை தேர்வு கவனம் செலுத்தும்.

ஜூன் மாதத்திற்குள் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வின் சோதனை தேர்வுக்கான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை முடிக்க சி.பி.எஸ்.இ வாரியம் திட்டமிட்டுள்ளது மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தை (DU) கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளது. கல்வி நாட்காட்டியை சீர்குலைத்த கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​ஆகஸ்ட் 2020 இல் எதிர்ப்பையும் மீறி, புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வுகளை டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினர், இந்த தேர்வு இணையம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாதவர்களுக்கு, அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்கள், குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு "பாரபட்சமாக" இருக்கும் என்று வாதிட்டனர். நீதிமன்றம் பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தை இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வுகளை நடத்த அனுமதித்தது. மாணவர்களுக்கு இந்த தேர்வை முடிக்க மூன்று மணி நேரமும், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரமும் வழங்கப்பட்டது, அதேநேரம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டு பொறுப்பாளர் அஜய் அரோரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: 'புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வின் முதல் மதிப்பீடு ஆகஸ்ட் 2020 இல் நடத்தப்பட்டது, கடைசியாக 2022 மார்ச்சில் நடத்தப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகம் 2022 ஜனவரியில் நேரடி தேர்வு முறையை முழுமையாகத் தொடங்கியது, ஆனால் நவம்பர் 2021 இல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு நடைமுறையின் கடைசி சுற்று ஒரு விருப்பமாக வழங்கப்பட்டது. அதன்பிறகு நாங்கள் வழக்கமான தேர்வு முறையை மீண்டும் தொடங்கினோம்.'

ஆதாரங்களின்படி, CBSE பள்ளிகளுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை ஆலோசித்தபோது, ​​வாரியத்தின் பாடத்திட்டக் குழு கடந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மதிப்பீட்டு முறையை மாணவர்கள் புரிந்துகொள்வதையும் ஏற்றுக்கொள்வதையும் உறுதிசெய்ய உயர்தர பாடப்புத்தகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விவாதித்தது.

பாடத்திட்டக் குழுக் கூட்டத்தின் போது, ​​சில உறுப்பினர்கள் ஆசிரியர்களை முதலில் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வுகளில் கலந்துகொள்ள முன்மொழிந்தனர், மேலும் அவர்கள் ஒரு நிலையான அளவுகோலாக அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வான அட்வான்ஸ்டு பிளேஸ்மென்ட் தேர்வுக்கு ஒத்த தரமான புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வுக்கான புத்தகங்களை உருவாக்க உதவ வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

No comments