தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.1000 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் 23,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டுக்குள் தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் 50 சதவீத பணிகள் நிறைவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை பணிகள் நிறைவு:
இதுவரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரியலூர், ஆண்டிமடத்தில் 86, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 22 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் மங்களூர், நல்லூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் 201 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பெத்தநாயக்கன்பாளையம், நங்கவல்லி, தாரமங்கலம், கொளத்தூர், ஏற்காட்டில் 157 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூரில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி:
அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
8,000 அரசுப்பள்ளிகளுக்கு இணையதள சேவை:
8,000 அரசுப்பள்ளிகளுக்கு அகண்ட அலைவரிசை இணையதள இணைப்புகள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments