ஏசியெல்லாம் தோத்தே போகும் போங்க! 1700 ரூபாயில் குளு குளு காற்று! செம ஐடியா! ஓல்டு இஸ் கோல்டு
ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை குளுகுளுனு வைப்பது எப்படி தெரியுமா? வெறும் 2000 ரூபாய் இருந்தால் போதும்!
இதுகுறித்து இன்பா என்ற நெட்டிசனின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கி வைத்து விட்டார்கள்! நீங்களும் கடந்த மூணு வருசமாத்தான் சொல்லிக் கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்த பாடைக் காணோம்" - என்று பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டனர் வீட்டில்.
எனக்கோ ஏ.சி.வைப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை. உங்கள் முன் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா? அப்படியானால் இதைப் படிக்கவும். ஏ.சி. வைத்தால், ஓர் அறையை இறுகப்பூட்டிக் கொண்டு, சுவாசித்த காற்றையே சுவாசித்துக் கொண்டு, நாளில் பாதியை கழிக்கவேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மை அடிமை செய்து விடும்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டால், அதிலிருந்து மீளவே முடியாமல் போய்விடும். மேலும், கடுமையான மின்வெட்டு, அப்போது என்ன செய்வது? ஏ.சி. வைத்திருக்கும் நண்பர்களிடம் விளக்கம் கேட்டேன். ஏ.சி.போட்டிருந்தாலும், மின்வெட்டானதும் மின் விசிறியைப் போட்டுக்கொள்வோம். புழுக்கம் தெரியாது, அதற்குள் மின்சாரம் மீண்டும் வந்துவிடும் என்றனர்.
எப்படியிருந்தாலும், ஏ.சி. வாங்க எனக்குச் சிறிதும் விருப்பமேயில்லை. ஏ.சி. வாங்கினால் இல்லம் குளிர்ச்சியாகிறதோ இல்லையோ, இல்லாள் மனம் குளிர்ச்சியாகிவிடும். ஆயிரம்தான் இருந்தாலும் எனக்கு மனம் இல்லை. இயற்கையோடு இசைந்து வாழ வழிதேடியது என்மனம். இதற்காகப் பலகோணங்களில் யோசித்தேன். கடைசியாக ஒருவழி மனதில் உதித்தது.
1984 ஆம் ஆண்டு மதுரையில் (ரீகல் தியேட்டர் அருகில் உள்ள) 'ராஜா ரேடியோஸ்' என்ற கடைக்கு மதிய நேரம் சென்றிருந்தேன். அந்தக் கடையில் ஏ.சி. இல்லை. ஆனாலும் அவ்வளவு வெயிலிலும் புழுக்கமாக இல்லை. இதற்குக் காரணம் என்ன என்று முதலாளியிடம் கேட்டேன்? அவர் கடையின் வாயில் அருகே இருந்த வெண்டிலேட்டர் மின்விசிறியைக்( ventilator fan) காண்பித்தார்.
அந்த மின்விசிறி, கடையில் இருக்கும் வெப்பக் காற்றை வெளியே அனுப்புவதற்குப் பதிலாக, வெளியே உள்ள காற்றை கடைக்குள் அனுப்பும் வகையில் மாற்றி மாட்டி வைக்கப்பட்டிருந்தது. எனக்குச் சற்று வியப்பாக இருந்தது. கடைமுதலாளி ஒருசிறு விளக்கம் அளித்தார். "மதியம் 3 மணி வரை வெளியில் வெயில் கடுமையாக இருக்கும். பின்னர் சிறிது காற்று வீச ஆரம்பித்துவிடும். இதனால் கடைக்கு வெளியே வெப்பம் குறைந்துவிடும்.
ஆனால் கடைக்கு உள்ளே புழுக்கமாக இருக்கும். எனவே மின் விசிறியை மாற்றியமைத்து, வெளியே உள்ள காற்றைக் கடைக்குள் திருப்பிவிட்டுள்ளேன். இதனால் கடைக்குள் புழுக்கமாக இருக்காது" என்றார்.
முதலாளியின் இந்தத் தொழில்நுட்பத்தை நாமும் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது. இப்பொழுது தான் இருபுறமும் இயங்கும் மின்விசிறி வந்துவிட்டதே! காரைக்குடியில் கடைக்குச் சென்று ஒரு எக்சாஸ்ட் விசிறி வாங்கினேன். மின்விசிறி ரூபாய் 1450-00. வயர் ரூபாய்.120-00, சுவிட்சு ரூபாய்.80-00. (மொத்தம் 1650-00) செலவு வந்தது.
வீட்டில் கொண்டு வந்து மாட்டினேன். இரவு நேரம் ஆரம்பித்தவுடன், இந்த விசிறியைப் போட்டுவிட்டேன். அருமையாக வேலை செய்கிறது.
இரவு 10 மணிக்குமேல் "சும்மா ஜிலு ஜிலுன்னு காத்து வருகிறது". ஏ.சி.யெல்லாம் தோத்தது போங்கள். இப்போது வீட்டில் அனைவருக்கும் இது பிடித்துப்போய் விட்டது. மின்செலவு மிகவும் சிக்கனம். மின்சாரம் தடைப்பட்டாலும் UPS-இல் இது நன்றாக வேலை செய்கிறது. அருமையான இயற்கைக்காற்று.
-வாழவந்தான்
இவ்வாறு இன்பா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருந்தார்.
No comments