Breaking News

அரசு ஊழியர்களுக்கும் மாதந்தோறும்... வரி பிடித்தம்!

Tamil_News_lrg_3619081
 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயமாக மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் புது நடைமுறை, இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. விருப்பம் போல வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கைவிடுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், வருமான வரி செலுத்தக் கூடியவர்களுக்கு, அவர்கள் விருப்பம் போல், மாதந்தோறும் அல்லது கடைசி மூன்று மாதங்களில் வருமான வரி பிடிக்கப்பட்டு வந்தது.

அரசு முடிவு

தற்போது, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எனப்படும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் வழியே வருமான வரியை கணக்கிட்டு, மாதந்தோறும் சம்பளத்தில் பிடிக்கும் முறையை அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது.

இந்த புது நடைமுறை, கடந்த ஏப்ரலில் நடைமுறைக்கு வரவிருந்தது. ஆனால், தலைமை செயலக சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மார்ச்சில் பிடித்த வருமான வரியே கடந்த மாதம் பிடிக்கப்பட்டது.

தற்போது, மாதந்தோறும் வருமான வரி பிடிக்கும் புது நடைமுறை, மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கருவூல கணக்குத்துறை சார்பில், அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதம்:

வருமான வரி செலுத்த தகுதி படைத்த ஊழியர்கள் அனைவருக்கும், அவர்கள் பெறும் சம்பளத்தின்படி, செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கிடப்படும்.

'பான் கார்டு'

அந்தத் தொகைக்கு எவ்வளவு பிடிக்கலாம் என கணக்கிட்டு, மாதந்தோறும் கட்டாயம் பிடிக்கப்படும். இந்த நடைமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

'பான் கார்டு' எனப்படும் நிரந்தர கணக்கு எண் இல்லாத ஊழியர்கள், அதை பெற்று, அந்த எண்ணை தெரியப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை, வருமான வரித்துறை அறிவித்துள்ள, 'Old Regime' எனப்படும் பழைய முறையில் கணக்கிட்டு பிடிக்க வேண்டுமா அல்லது 'New Regime' எனப்படும் புது நடைமுறைப்படி பிடிக்க வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.

கோரிக்கை

எந்த முறையில் வருமான வரி பிடிக்க வேண்டும் என்பதை, ஒரு முறை தேர்வு செய்த பின், எதிர்காலத்தில் மாற்ற முடியாது.

எனவே, கவனமாக தேர்வு செய்யவும். வருமான வரித்துறையின் பழைய கணக்கீட்டு நடைமுறையின்படி வருமான வரி செலுத்துவோர், தங்கள் சேமிப்பு விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை செயலக சங்கம், நடப்பு நிதியாண்டிலிருந்து, புதிய மென்பொருள் வழியே வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments