பிப்.15-ல் அடையாள வேலை நிறுத்தம்; 26 முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ :
கடந்த 1.04.2003-க்குப் பின் அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளிலுள்ள 30 சதவீத காலிப் பணியிடங்களை உனடியாக நிரப்ப எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனையொட்டி ஜன.30-ல் மறியல் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மதுரையில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.நீதிராஜா, பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ் ஆகியோர் தலைமையில் வகித்தனர்.
முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஓ.சுரேஷ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் கி.முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ப.குமார் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி பிப்.15-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து பிப்.26-ல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments