Breaking News

குரூப் 2 தேர்வர்களே டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு.. மறந்தும் இதை மிஸ் பண்ணிடாதீங்க

 


குரூப்-2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1:2, 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு 327 பேர் கொண்ட பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் வரும் நேர்முகத் தேர்வுடன் கூடிய 116 குரூப்-2 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியானது.

இதேபோல் நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத 5 ஆயிரத்து 413 குரூப்-2ஏ பதவிகளுக்கும் அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைப்பு வந்தது. அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. இதனிடையே குரூப்-2, 2ஏ பதவிகளில் சில பணியிடங்கள் சேர்த்தும், சில இடங்களை குறைத்தும் டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவு கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 பதவிகளில் வரும் 161 பணியிடங்களுக்கு முதலில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவில் 583 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 1:2, 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு 327 பேர் கொண்ட பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மீதமுள்ள 256 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பட்டியலில் இடம் பெற்றுள்ள 327 பேருக்கான நேர்முகத் தேர்வு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்றும், தபால் மூலம் அனுப்பப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு இருக்கும் தேர்வர்கள் அனைத்து உரிய அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கூட சமர்ப்பிக்க தவறினால், அடுத்தகட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments