Breaking News

அரசு பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் 'சர்ப்ரைஸ்'.. லீவ் முடிஞ்சு வரும்போது ஹை ஸ்பீடு நெட் வசதி!

 

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் 100 mbps வேகம் கொண்ட அதிவேக இணையதள சேவை வழங்கும் பணிகள் நிறைவடையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் படுத்த அரசு முயன்று வருகிறது.

அந்த வகையில், 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 24,291 தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு ஆசிரியர்களுக்கு டேப்லெட் எனப்படும் கையடக்க கணினியும் வழங்கப்பட உள்ளது.

ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஆசிரியர்களுக்கான டேப் பயன்பாடுகளுக்கு இணைய வசதி அவசியம். ஆனால், எல்லா அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதிகள் இல்லை. எனவே, இணைய வசதி இல்லாத பள்ளிகளில் இணைய சேவை தருவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100 சதவீதம் இணைய வசதி இயங்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் தான் இணைய வசதிகள் இருந்தன. அதேபோல, பல நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளும் இணைய வசதி இல்லை. இந்நிலையில், பிஎஸ்என்எல் இணைய சேவை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பெரும்பான்மையான பள்ளிகளுக்கு இணைய சேவை வழங்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சியுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய சேவை வழங்கும் பணிகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100 சதவீதம் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும், மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு கல்வி கற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments