Breaking News

தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?

நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்கியது. இதில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-ன் மாவட்ட அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் உயர் கல்வி படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் மாணவமாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ''கடந்த 3 ஆண்டுகளில் துவங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் புரட்சித் திட்டங்கள். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்னும் நோக்கில் தான் திட்டங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. 'பசித்தவனுக்கு உணவு கொடு; பின்னர் போதனை செய்' என்னும் விவேகானந்தரின் சொல்லுக்கு ஏற்ப காலை உணவு திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த தலைமுறை மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. உயர்கல்வி சேர்வோர் விகிதம் தமிழ்நாட்டில் உயர, இந்த நான் முதல்வன் திட்டம் மிக உதவியாக உள்ளது.

30,269 மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான துறைகளை எடுத்து பயில இந்த திட்டம் உதவியாக உள்ளது. நிலம், பணம் உள்ளிட்ட முதலீட்டை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

தேசிய அளவில் தமிழகம்தான் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இருந்த போதிலும் 100 மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்றும் உயர்கல்வி பயிலாத மாணவர்களை கண்டறிந்து குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்றவை உயர்கல்வித்துறையில் மாணவர்கள் சேர்வதற்கு ஊக்கமாக இருக்கும். தமிழக அரசின் முயற்சியால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20 - 25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கல்வி ஆண்டில் அமல்

தமிழ்ப் புதல்வன் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, அமல்படுத்தப்படும் என்றும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments