Breaking News

தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ.14 கோடி நன்கொடை அளித்த முன்னாள் மாணவர்!

 

50 வகுப்பறைகள், 40 கணினிகள், டிஜிட்டல் ஸ்மார்ட்போர்டுகள்... என இன்டர்நேஷனல் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக தான் படித்த பள்ளியை உயர்த்த ரூ.14 கோடி நன்கொடையாக அளித்துள்ளார் முன்னாள் மாணவரும், மருத்துவருமான டாக்டர் எச்.எம். வெங்கடப்பா. வாழ்க்கையில் வெற்றி பெறும் போது, பெரும்பாலானோர்கள், புதிய இலக்கை நோக்கி முன்னேறி செல்கின்றனர். 
சிலரோ, இன்றைய நிலைமைக்கு உயர்ந்ததற்கு காரணமான, அவர்களை செதுக்கிய மனிதர்கள், இடங்கள், ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவிக்க முன்வருகின்றனர். பெரும்பாலும் இந்த நன்றியுணர்வு செயல்கள் கவனிக்கப்படுவதில்லை. ஆனால், சில நேரங்களில், அவை வாழ்க்கையை மாற்றும் ஊக்கமளிக்கும் கதைகளாக மாறுகின்றன. அப்படியாக, அரசுப்பள்ளியில் படித்து மருத்துவரான 79 வயதான கர்நாடகாவை சேர்ந்த வெங்கடப்பா, அவர் படித்த அரசுப் பள்ளியை சீரமைக்க ரூ.14 கோடி நன்கொடையாக வழங்கி அசத்தியுள்ளார். Karnataka Alumnus Spends Rs 14 Crore தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ.14 கோடி நன்கொடையாக தந்த முன்னாள் மாணவர்! கர்நாடகாவின் சன்னபட்னா தாலுகாவில் உள்ள ஹொங்கனூர் என்ற அமைதியான கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியின் முன்னாள் மாணவர் வெங்கடப்பா. 1949ம் ஆண்டு முதல் 1957 வரை இப்பள்ளியில் படித்துள்ளார். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடின உழைப்பின் மூலம் படித்து, எம்பிபிஎஸ் மற்றும் எம்டி பட்டம் பெற்று, மருத்துவராகி அவரது வாழ்க்கையை முன்னேற்றினார். அரசு மருத்துவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற வெங்கடப்பா, கன்வா டயக்னாஸ்டிக்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். ஆனால், அவரது வாழ்க்கையை வடிவமைக்க உதவிய தலைமை ஆசிரியர் மற்றும் அர்ப்பணிப்புள்ள மற்ற ஆசிரியர்களையோ அவர் ஒருபோதும் மறக்கவில்லை. தற்போது 79 வயதாகும் இவர், அவரது பயணத்தை அழகாக வடிவமைத்ததற்காக அவரது ஆசிரியர்களுக்கும், குறிப்பாக காந்தியவாதியான அவரது தலைமை ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்க எண்ணினார். அதையொட்டி, 2022ம் ஆண்டில், டாக்டர் வெங்கடப்பா அவரது சொந்த பணத்திலிருந்து ரூ.14 கோடியை பள்ளியை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்பவும் நவீனமயமாக்கவும் நன்கொடையாக வழங்க முடிவு செய்தார். "1949ம் ஆண்டு முதல் 1957 வரை, இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். இந்த பள்ளியின் ஆசிரியர்கள் எனது கல்வி வாழ்க்கைக்கான அடித்தளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள். விவசாய பின்னணியைக் கொண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், எம்.பி.பி.எஸ் மற்றும் எம்டி முடித்தேன். அப்போதைய பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தியவாதி. அவர் எனக்கு நிறைய உத்வேகம் அளித்தார். இந்தப் பள்ளியுடனான எனது தொடர்பை உணர்த்தவும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு உயர்தர கல்வியை இலவசமாகப் பெறுவதை உறுதி செய்யவும் இந்தப் பள்ளியை மீண்டும் கட்டியெழுப்பவும் நவீனமயமாக்கவும் முடிவு செய்தேன்," என்று 79 வயதான மருத்துவர் தி இந்துவிடம் கூறினார். Venkatappa 50 வகுப்பறைகள், 40 கணினிகள், டிஜிட்டல் ஸ்மார்ட்போர்டுகள்.. அதன்படி, 2022ம் ஆண்டு ஜூன் மாதம், நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த பள்ளியின் பழைய கட்டிடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. 50 விசாலமான வகுப்பறைகள், 40 செயல்படும் கணினிகள், அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள், டிஜிட்டல் ஸ்மார்ட்போர்டுகள், ஒரு வளமான நூலகம் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு என பெங்களூருவின் சில பிரபலமான சர்வதேச பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இரண்டரை ஆண்டில் ஒரு முழுமையான மாற்றத்தை அடைந்துள்ளது. எல்.கே.ஜி/யு.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான கல்வியை உள்ளடக்கிய இப்பள்ளி, கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் கல்வியை வழங்குகிறது. டாக்டர் வெங்கடப்பாவின் பெற்றோர் சென்னம்மா மற்றும் மஞ்சே கவுடாவின் பெயரிடப்பட்ட இந்தப் பள்ளி, இந்த கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே அதன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. புதிய பள்ளி ஏற்கனவே மிகவும் பிரபலமாகிவிட்டதால், இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளது. இதனால் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக உயர்ந்துள்ளது. பள்ளியின் முழு சீரமைப்பிற்காக ரூ.14 கோடி வழங்கியதுடன், பள்ளியின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.10 லட்சம் பங்களிப்பை வழங்க டாக்டர் வெங்கடப்பா முடிவு செய்துள்ளார். ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரிகளை பணியமர்த்த வேண்டியிருப்பதால், அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்திர ஊதியமான ரூ.12,500 தவிர, கூடுதலாக ரூ. 5,000 வழங்கவும் முடிவு செய்துள்ளார். Venkatappa பள்ளியின் திறப்பு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர்! இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மாற்றத்தை அடைந்துள்ள பள்ளியின் திறப்பு விழாவானது கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அம்மாநில அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார் புதிய பள்ளியை முறையாகத் திறந்து வைத்தார். பள்ளி மேம்பாட்டு கண்காணிப்புக் குழுக்களின் ஈடுபாட்டின் மூலம், மற்ற அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த, இதுபோன்ற பங்களிப்புகளை மேலும் பெற அவரது துறை முயற்சிக்கும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா கூறினார்.


No comments