Breaking News

நாளை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

 


முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்(ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டு(2025-26) அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘ஒரு கல்லூரியில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள், ஆய்வகங்கள், நூலகம் உட்பட கட்டமைப்பு வசதிகள் இருப்பது அவசியமாகும். நடப்பாண்டு இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளில் 141-ல் பேராசிரியர் பற்றாக்குறை, நூலகங்கள், ஆய்வகங்கள் குறைபாடு போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை.

இதையடுத்து 141 கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்லூரிகள் குறைபாடுகளை 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். அதன்பின் நேரில் ஆய்வு செய்த பின்னரே இணைப்பு அங்கீகாரம் உறுதி செய்யப்படும். இல்லையெனில் அந்த கல்லூரிகளின் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.

இந்தசூழலில் அண்ணா பல்கலை.யின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கல்லூரியின் சேர்க்கை பெற்ற பின் அதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும். எனவே, சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments