நல்லாசிரியர் விருதில் அரசியல் தலையீடு ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதால் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஆர்வமில்லாமல் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அந்த நாளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி அரசு ஆசிரியர்களை கவுரவித்து வருகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில் 2025-26 ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தகுதியான ஆசிரியர்கள் ஜூலை 13க்குள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாடானை தாலுகாவில் கடந்த இரு ஆண்டுகளாக யாரும் மாநில நல்லாசிரியர் விருது பெறவில்லை. எனவே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் கதிரவன் கூறியதாவது:
பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆசிரியர், மாணவர்கள் திறமையை கண்டறிந்து அந்தப் பள்ளி எந்த வகையில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்து ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால் சில ஆண்டுகளாக விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களை நேரில் வரச்சொல்லி அவர்கள் கொடுக்கும் குறிப்புகளை வைத்து தேர்வு செய்யப்படுகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மூலம் பரிந்துரை கடிதம் பெற்றும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இம்மாதிரி வழங்குவதால் மக்களின் நன்மதிப்பை பெற்ற மாணவர்களால் மதிக்கப்படக்கூடிய நல்ல ஆசிரியர்கள் விண்ணபிக்க ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
இம் மாதிரி விதிமுறை மீறுவதால் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த விருது கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தன்னலமற்ற கல்விச் சேவை புரியும் ஆசிரியர்களுக்கு அரசு காட்டும் மரியாதை என்றார்.
No comments