மாணவர்களிடையே நடந்த மோதலில் உயிரிழந்த பிளஸ் டூ மாணவர் - அதிகரிக்கும் வன்முறைக்கு காரணம் என்ன?
ஈரோட்டில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் சக பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சக மாணவியிடம் பேசிப்பழகுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இச்சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக, பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள மாணவர்களிடம் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களும், வன்முறையைக் கையாள்வதில் தவறான வழிகாட்டுதல்களுமே இதற்குக் காரணம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இத்தகைய இளம்பருவத்திலுள்ள மாணவர்களை சரியான முறையில் வழிநடத்துவதில் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் பெரும் பங்கிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்தவர் சிவா (வயது 45). துணி நிறுவனத் தொழிலாளி. இவருடைய மகன் ஆதித்யா (வயது 17). குமலன்குட்டையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூலை 2 ஆம் தேதியன்று மாலையில், பள்ளிக்கு அருகில் ஆதித்யா மயங்கிக் கிடந்ததாகவும், நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் சிவாவுக்கு போன் வந்துள்ளது. அங்கு அவர் சென்றபோது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளார் ஆதித்யா. மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே ஆதித்யா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாணவன் ஆதித்யாவின் மரணம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், "அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வேறு பிரிவு மாணவிகளுடன் ஆதித்யா பேசுவது தொடர்பாக அவருக்கும், அந்த பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் நடந்துள்ளது. அப்போது மாணவர்கள் தாக்கியதில் ஆதித்யா கீழே விழுந்து மயங்கியுள்ளார். அவருடன் இருந்த நண்பர்கள், அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் நாடித்துடிப்பு மிகவும் குறைந்து மரணமடைந்துள்ளார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments