அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.? முதலமைச்சருக்கு பறந்த முக்கிய அறிக்கை
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா? அரசு அமைத்த குழுவின் அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக உள்ளனர். அந்த வகையில் அரசுக்கும் - மக்களுக்கும் இடையே இருந்து அரசின் திட்டங்கள் முழுமையாக சிறப்பான முறையில் அடிதட்டு மக்கள் வரை சென்று சேர்வதற்கு கருவியாக உள்ளனர். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு, உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இருந்த போதும் தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய ஓய்வூதிய கோரிக்கையாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளது. தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது,
இந்த ஒய்வூதிய திட்டமானது 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தத் திட்டத்தில் ஊழியர்களும் அரசும் இணைந்து ஓய்வூதிய நிதியில் பங்களிக்கின்றனர், ஆனால் இது பழைய திட்டத்தை விட குறைவான பலன்களை தருவதால் ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே பழை ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய திட்டத்தில், ஊழியர்களின் இறுதி ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக உறுதி செய்யப்பட்டது, இதனிடையேதான் தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஆராய ஒரு குழுவை அமைத்து, 2025 செப்டம்பர் 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படலாம். என தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவானது அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே 2026ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும்; அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய கோரிக்கையாக; பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். தற்போதைய முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அன்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போராட்ட பந்தலுக்கு இரவு 12 மணிக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பழைய ஓய்வதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக உறுதி அளித்தார்.
மேலும் அவரது தேர்தல் வாக்குறுதியாக 2021-ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதாக உறுதி அளித்து இருந்தார்.இன்று அவைகள் எல்லாம் மறந்து முதலமைச்சர் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கிறார். தொடர்ந்து காலந்தாழ்த்துகிறார். தமிழ்நாடு முதலமைச்சரை இந்த நான்கு ஆண்டுகளில் எட்டு முறை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப் படவில்லை.
தமிழக முதல்வர் உடனடியாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இந்த தமிழ் மண்ணில் மீண்டும் அமுல்படுத்திட வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில், "வெளி முகமை" (தற்காலிக ஊழியர்) பணியிடங்களை தவிர்த்து நிரந்தர பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்,
மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டு அரசு பள்ளிகளில் கிடைக்கின்ற காலி பணியிடங்களை உடனே இந்தக் கல்வி ஆண்டுக்குள் நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments