Breaking News

வங்கி லாக்கரில் இருக்கும் நகைகளை வைத்துக் கூட பணம் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

 


இந்தியாவில் பலரும் தங்களது எதிர்கால நலன் கருதியும், பாதுகாப்புக்காகவும் தங்கத்தை வங்கி லாக்கரில் சேமித்து வைப்பார்கள். அந்த தங்கம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது என்பதே நமக்கு நிம்மதி தரும். ஆனால், அந்த தங்கம் மெதுவாக சேதமடைந்து வருவதும், அதன் மதிப்பு குறைந்து வருவதும் எத்தனை பேருக்கு தெரியும்..? அதுகுறித்து நிதி ஆலோசகர் லோவிஷ் ஆனந்த் தெளிவாக விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக லோவிஷ் ஆனந்த் சமீபத்தில் தனது நண்பருக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த நண்பரின் குடும்பத்தினர் தங்களின் பாரம்பரிய தங்க நகைகளை, பாதுகாப்புக்காக ஒரு வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர். ஆனால், பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த லாக்கரில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் விளைவாக, அந்த நகைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. ஆனால், வழக்கமான பாதுகாப்பு காப்பீட்டின் கீழ் இந்த பாரம்பரிய தங்க நகைக்கு ரூ.3 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நகைகளின் உண்மையான மதிப்பு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும்.

பல்வேறு வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கர்கள் பெரும்பாலும் ரூ.3 லட்சம் வரையிலேயே காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இது, ஒரு சாமானிய நகை தொகுப்பின் மதிப்பையும், முழுமையாக ஈடுகட்ட இயலாத அளவிற்கு குறைவாகவே இருக்கும் என்று லோவிஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், "இன்றும் பலர் வங்கிக் லாக்கர்களை தங்கள் குடும்பத்தின் தங்க சேமிப்புகளுக்கு 'மிகப்பெரிய பாதுகாப்பு' என்று நம்புகிறார்கள். ஆனால், இது மிக தவறான நம்பிக்கை" என்று கூறியுள்ளார்.

உண்மை என்ன..?: வங்கி லாக்கர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு மிகவும் குறைவானது. திருட்டு, தீவிபத்து அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் நேர்ந்தாலும், அதற்கான நஷ்ட ஈடு லாக்கர் வாடகை அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஒரு சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் செல்லாது. எனவே, லாக்கரில் நீங்கள் வைக்கும் நகைகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சத்திற்கும் மேல் இருந்தாலும், காப்பீடு அந்த அளவு மட்டுமே கிடைக்கும். நீங்கள் வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு கோடிகளில் இருந்தாலும், அதற்கான பாதுகாப்பு வெறும் லட்சங்கள் மட்டும்தான் என ஆனந்த் எச்சரித்துள்ளார்.

என்ன செய்யலாம்..?: தங்க நகைகளுக்கான தனிப்பட்ட காப்பீடு எடுக்கலாம். நகைகளின் மதிப்பீடு, புகைப்பட ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்கலாம். தேவையானபோது, நிதி ஆதாரமாகவும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடலாம். தங்கத்தை உண்மையாக பாதுகாக்க விரும்பினால், நம்பிக்கையை விட திட்டமிடல் தான், முக்கியம்.

தங்கம் லாக்கரில் இருப்பது பாதுகாப்பானதா..?: லாக்கரில் தங்கத்தை வைப்பது பாதுகாப்பானதா என சந்தேகிப்பதை விட்டு விட்டு, அதற்கு மாற்றாக அரசு இயற்றியுள்ள GMS திட்டத்தை தேர்வு செய்யலாம் என்று லோவிஷ் ஆனந்த் பரிந்துரை செய்துள்ளார். இந்த திட்டத்தில் நீங்கள் பயன்படுத்தாத நகைகளை வங்கியில் வைப்பு செய்யலாம். 5, 7, 12 மற்றும் 15 ஆண்டுகள் வரை காலம் தேர்வு செய்யலாம். வைப்பு செய்யும் தங்கத்திற்கு 2.25% முதல் 2.5% வரை ஆண்டு வட்டி வழங்கப்படும். தங்கம் பரிசோதிக்கப்பட்டு பதிவாகும். பாதுகாப்பாக வங்கி பராமரித்துக் கொள்ளும். சேதம், திருட்டு, காப்பீடு பற்றிய எந்த கவலையும் தேவையில்லை.

நகைகளை பத்திரமாக வைத்திருப்பது மட்டும் போதாது. அவை உங்கள் நிதி வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும். லாக்கர் என்பது பேக்கிங் பாக்ஸ். உண்மையான பாதுகாப்பு என்பது உங்கள் நிதி செல்வத்தை வேலை செய்ய வைப்பது தான் என ஆனந்த் விளக்கியுள்ளார். அதாவது, வங்கி லாக்கரில் உள்ள தங்கத்துக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை. மாற்றாக Gold Monetisation Scheme மூலம் பாதுகாப்பும், வருமானமும் பெறலாம். உங்கள் நகைகள் நேரத்தில் பராமரிக்கப்படவும், வட்டி ஈட்டவும் இது சிறந்த வழியாகும் என்று ஆனந்த் கூறியுள்ளார்.

வங்கி லாக்கரில் இருக்கும் தங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பும் குடும்பங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றை நிதி ஆலோசகர் லோவிஷ் ஆனந்த் விடுத்துள்ளார். அவரின் பதிவில், "இது பயம் ஏற்படுத்தும் செய்தி அல்ல. விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தி. இந்தியாவின் பல குடும்பங்களில் தலைமுறை தங்கம் லாக்கரில் தூசி படிந்து கிடக்கிறது. ஆனால், அது பாதுகாப்பானதா? வளர்ச்சியடைகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். வங்கி லாக்கரில் இருக்கும் தங்கம் மீது முழு நம்பிக்கையுடன் இருக்க முடியாது. ஆனால் GMS திட்டம் மூலம், பாதுகாப்பாகவும் வளர்ச்சியுடனும் தங்கத்தை வைத்திருக்க முடியும். தங்கத்தின் உரிமை இழக்காமல், வீணாக வைக்காமல், பயனுள்ளதாக மாற்றும் திட்டம் தான் இது என்று ஆனந்த் கூறியுள்ளார். 

 

 

No comments