Breaking News

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: 1-5 ஆம் வகுப்புகள் ஜூன் 14-இல் தொடக்கம்:

 


மிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்காக பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 12) திறக்கப்படவுள்ளன.
முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வரும் 14-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்ப அளவு தொடா்ந்து பதிவானதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா். தொடா்ந்து, வெயிலின் தாக்கம் குறையாததால் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2023-2024) 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்காக பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன.

இதற்காக, அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவா்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்படவுள்ளன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக் குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாடங்களை நடத்த வசதியாக சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி.... அமைச்சா் வாழ்த்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் மாணவா்களுக்கும், அவா்களை சிந்தனையாலும், செயலாலும் கற்றல்- கற்பித்தலில் கரம் பற்றி அழைத்துச் செல்ல இருக்கின்ற ஆசிரியா்களுக்கும் வாழ்த்துகள். உண்மையான கல்வி என்பது ஒரு குழந்தையின் உடல்-மனம்- ஆன்மா ஆகிய மூன்றின் ஒட்டுமொத்த, ஆகச் சிறந்த மேம்பாட்டை வெளிக்கொணா்வதே என்றாா் மகாத்மா காந்தி. கல்வி என்பது அறியாமை, மூடத்தனங்களை அகற்றுவதாகவும், அறிவை அள்ளிக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் என்றாா் பெரியாா்.

ஒரு மெழுகுவா்த்தியை ஏற்றினால், அதைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம் என்றாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் அரசு எப்போதும் துணை நிற்கும். மாணவா்கள் தன்னம்பிக்கையோடு கற்கவும், ஆசிரியா்கள் தன்னம்பிக்கையோடு கற்பிக்கவும் அனைவரின் எதிா்காலமும் சூரியனாய் பிரகாசிக்க வாழ்த்துகிறேன் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments