Breaking News

NCERT - நடவடிக்கையால் கல்வியாளர்கள் அதிருப்தி; தங்களது பெயரை புத்தகத்திலிருந்து நீக்கக் கோரிக்கை!


பாடப்புத்தகங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு NCERT மாற்றியுள்ளதால் , அவற்றில் தங்கள் பெயர்கள் நீடிப்பதில் அர்த்தமில்லை எனக்கூறி 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாடபுத்தகங்களில் பல்வேறு மாற்றங்களை NCERT செய்து வருகிறது.வாக்கியங்களை நீக்குதல் மற்றும் சில பிரிவுகளை அகற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். பரிணாமக் கோட்பாடு, பனிப்போர், முகலாய நீதிமன்றங்கள் மற்றும் தொழில் புரட்சி பற்றிய குறிப்புகள், 2002 குஜராத் கலவரங்கள், இந்தியப் பொருளாதாரத்திற்கு விவசாயத்தின் பங்களிப்பு , ஜனநாயகத்திற்கான சவால்கள் உள்ளிட்ட பிரிவுகள் பாடபுத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த 33 கல்வியாளர்கள் கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் அசல் நூல்களில் பல கணிசமான திருத்தங்கள் இருப்பதால், அவற்றை வெவ்வேறு புத்தகங்களாக ஆக்குவதால், இவை நாங்கள் தயாரித்த புத்தகங்கள் என்று கூறுவது மற்றும் அவற்றுடன் எங்கள் பெயர்களை இணைப்பது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளனர்.

NCERT -யின் இந்த மாற்றங்கள் 'பாடப்புத்தகங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்து, கல்வி ரீதியாக செயலிழக்கச் செய்துள்ளது' என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். NCERT -க்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில் அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் அரசியல் அறிஞருமான பிரதாப் பானு மேத்தா, டெல்லி பல்கலைக்கழகத்தின் ராதிகா மேனன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிவேதிதா மேனன் (ஜேஎன்யு), காந்தி பிரசாத் பாஜ்பாய், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் முன்னாள் ஜேஎன்யு பேராசிரியர் ராஜீவ் பார்கவா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். NCERT ஆலோசகர்களாக இருந்த யோகேந்திர யாதவ் மற்றும் சுஹாஸ் பால்ஷிகர் ஆகியோர் தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட நிலையில், தற்போது 33 கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து NCERT அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பதிப்புரிமை உரிமையின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்ய கவுன்சிலுக்கு உரிமை உண்டு என்றும், NCERT-ன் முடிவுகள் உறுப்பினர்களின் கேள்விக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

No comments