Breaking News

மூன்றாவது குழந்தை பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் - என்ன நடந்தது?


த்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர், மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி தற்போது அந்தப் பெண் இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.

ரஹ்மத் பானோ மன்சூரி என்ற அந்த ஆசிரியர் அகர் மால்வா மாவட்டம் பிஜா நாக்ரியில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

திருத்தப்பட்ட மத்தியப் பிரதேச சிவில் சர்வீசஸ், 1961 விதி 6ன் கீழ், கடந்த 7ஆம் தேதி ரஹ்மத் பானோ மன்சூரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விதியின்படி, ஜனவரி 26, 2001க்குப் பிறகு அம்மாநில அரசு ஊழியர் மூன்றாவது குழந்தை பெற்றால் அவரைப் பணியிலிருந்து நீக்க முடியும்.

இந்த விதியின்படி, அனைத்து வகையான தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தன் தகுதியை நிரூபித்த ஒருவர், மூன்று குழந்தைகளின் பெற்றோராக இருந்தால் அவருக்கு அரசுப்பணி வழங்கப்படாது.

ரஹ்மத் பானோ மன்சூரிக்கு மூன்றாவது குழந்தை 2009ஆம் ஆண்டு பிறந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டுதான் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தப் புகாரை மத்திய பிரதேச ஆசிரியர் சங்கம் அளித்தது. அந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய உஜ்ஜைன் பொது கல்விப் பிரிவு இணை இயக்குநர், ரஹ்மத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கேள்விக்கு உள்ளாகும் நடவடிக்கை

இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக பதிலளிக்க உஜ்ஜைன் மாநில பொதுக் கல்விப் பிரிவின் இணை இயக்குநர் ரவீந்திர குமார் சிங் மறுத்துவிட்டார்.

பிபிசியிடம் பேசிய ரஹ்மத் பானோ மன்சூரி, இந்த விவகாரத்தில் தான் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

''என்னுடைய ப்ளாக்கில் 34 ஆசிரியர்களுக்கு மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உள்ளன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான் மட்டும் குறிவைக்கப்பட்டுள்ளேன். நடவடிக்கை எடுத்தால் அது அனைவரின் மீதானதாகவும் இருக்க வேண்டும்'' என்கிறார் ரஹ்மத் பானோ மன்சூரி.

இது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது உங்கள் மீது மட்டும்தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறுகிறார் ரஹ்மத் பானோ மன்சூரி.

அந்த 34 ஆசிரியர்கள் விவரங்களை பிபிசியிடம் பகிர்ந்த அவர், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்திலும் சமர்பித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான ஓர் ஆசிரியை, "என் வருமானத்தை நம்பியே குடும்பம் உள்ளது. வேலை இழந்தால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும். எனக்கு வேறு வேலை கிடைக்காது'' என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய மற்றொரு ஆசிரியை, மத்திய பிரதேசத்தில் இது போன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

குடும்பப் பொறுப்பு

ரஹ்மத் பானோ மன்சூரி மால்வாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக 2003ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

தனக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருப்பதாக அவர் கூறுகிறார். 2000ஆம் ஆண்டு பிறந்த மகள் ஆயுர்வேத மருத்துவம் பயின்று வருகிறார். 2006ஆம் ஆண்டு பிறந்த மகன் நீட் தேர்வுக்காக தயாராகிவருகிறார். 2009ஆம் ஆண்டு பிறந்த மூன்றாவது மகன் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இவர் கணவர் சயீத் அகமது மன்சூரி மதரஸாவில் பணிபுரிகிறார். அவர் சம்பளம் சுமார் 5000 முதல் 6000 ஆயிரம் ரூபாய். ரெஹ்மத் பானோ கூறுவதுபடி, மொத்த குடும்பத்தின் பொறுப்பும் அவரிடம்தான் உள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற விதி தனக்குத் தெரியும் என்பதை ரஹ்மத் பானோ மன்சூரி ஏற்றுக்கொள்கிறார்.

"இந்த குழந்தையின் கர்ப்பம் குறித்த தகவல் மிகவும் தாமதமாகத் தெரிந்தது. அந்த நேரத்தில் கருக்கலைப்பு செய்ய மருத்துவர் மறுத்துவிட்டார். இதுபோன்ற சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர் கூறினார். அதனால் இந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டியிருந்தது'' என்கிறார் ரஹ்மத் பானோ மன்சூரி.

ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்

''ஒரு விதி இருந்தால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், யாரையும் குறிவைக்கக்கூடாது'' என்கிறார் ரஹ்மத்தின் கணவர் சயீத் அகமது மன்சூரி.

எனினும், நீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என மன்சூரி குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரஹ்மத் மீது 2020ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷியாம் சிங் பன்வார், நான் யாரையும் குறிவைக்கவில்லை என்கிறார்.

மத்தியப் பிரதேச ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டுமேயொழிய, எதிராக அல்ல என்று கூறும் ரஹ்மத் பானோ மன்சூரி தன்னுடைய விஷயத்தில் ஆசிரியர் சங்கம் எதிராக செயல்பட்டதாகக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு விதிஷா மாவட்ட கல்வித்துறையில் இதுபோன்ற ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அந்த மாவட்டத்தில் மட்டும் 954 பேர் மூன்று குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பது தெரியவந்தது. அந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

No comments