Breaking News

டிப்ளமோ படிப்புகளுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்!, டாப் 5 டிப்ளமோ படிப்புகள் உள்ளிட்ட அனைத்தும்:

மீபமாக டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பது, டிப்ளமோ படிப்பை படிப்பதற்கான ஆர்வமும், வேலைவாய்ப்பும் உயர்த்திருப்பதைக் காட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சீட்டுகள் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் தொடரும் நிலையில், மாறாக டிப்ளமோ படிப்புகளில் புது புது துறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தெடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள நன்மை, எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என இப்போது பார்ப்போம்.

டிப்ளமோ என்றால் என்ன?

டிப்ளமோ படிப்புகள் வழக்கமான (டிகிரி) பட்ட படிப்புகளைக் காட்டிலும் சற்றே மாறுபட்டவை. தொழில்முறை கல்வி என்பதால் தியரி அதிகம் இல்லாமல் நேரடியாக செயல்முறை மூலம் கற்பிக்கப்படுகின்றன. இதன் மூலம் படிப்பை முடித்த உடனேயே மாணவர்கள் தாங்களாகவே அந்த துறை சார்ந்த வேலையை செய்யும் அளவிற்கு தகுதி பெறுகின்றனர். மேலும் பட்ட படிப்பு மற்றும் இன்ஜினியரிங் போல் 3 முதல் 5 ஆண்டுகள் எடுப்பதில்லை. தேர்ந்தெடுக்கும் துறை மற்றும் அதன் கடினத்தன்மையை பொறுத்து 6 மாதம் முதல் தொடங்கி 2 வருட அளவிற்குள் படிப்பை முடித்து விடலாம்.

கொட்டி கிடைக்கும் வேலைவாய்ப்புகள்

இன்றைய மார்க்கெட்டில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் டிப்ளோமா முடித்த மாணவர்களை பணியமர்த்துகின்றன. செயல் முறை மூலம் கற்பிக்கப்படுவதால் இவர்கள் நேர்த்தியாக வேலையை முடிக்கும் திறன் பெற்றிருப்பதாலும் பெரிய அளவில் தனியாக பயிற்சி வழங்க வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. சரி டிப்ளமோ முடித்தால் தனியார் வேலை மட்டும் தானா அரசு வேலை இல்லையா என்றால் அதற்கும் வாய்ப்பு உள்ளது.

அரசு வேலைகள்

முக்கிய அரசு பொதுத் துறைகளான இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், BSNL, ONGC, BHEL - பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், ஐபிசிஎல் - இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட், NTPC - தேசிய அனல் மின் கழகம், சுகாதாரத் துறை, டிஆர்டிஓ - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய பொதுத் துறைகளில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகும் போது விண்ணப்பித்து அரசு வேலையை பெறலாம். அனுபவம் இல்லாதவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சியும் பொதுத் துறை நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது மட்டுமே போதுமான தகுதி ஆகும். டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு தனியாக பெரும்பாலும் நுழைவுத் தேர்வு தேர்வு எதுவும் நடத்தப்படுவது இல்லை.

எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்:

மேனேஜ்மேண்ட், கலை, மெடிக்கல், இன்ஜினியரிங், சட்டம், பாராமெடிக்கல், அறிவியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், மக்கள் தொடர்பியல், டிசைனிங், வணிகம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், விவசாயம், தொழில் படிப்புகள், பல் மருத்துவம் சார்ந்த படிப்புகள், அனிமேஷன், கட்டடக்கலை சார்ந்த பல்வேறு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இதில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம் மற்றும் அவர்களின் திறமையை சார்ந்தது. உங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்த பின்பு அந்த குறிப்பிட்ட படிப்பு எந்த கல்லூரி அல்லது நிறுவனத்தில் சிறப்பாக உள்ளது என்பதைக் கண்டறிந்து சேரலாம்.

டாப் 5 டிப்ளமோ படிப்புகள்:

1. டிஜிட்டல் மார்க்கெட்டிங்

வங்கி சேவை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் இதற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. டிப்ளமோ இன் இன்ஜினியரிங்

டிப்ளமோ இன் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் இரண்டும் ஒன்றுதான். அணைத்து இன்ஜினியரிங் படிப்புகளின் அடிப்படையிலும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன, எடுத்துக்காட்டாக டிப்ளோமா இன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் பொறியியல், டிப்ளமோ இன் கட்டடக்கலை, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெரேன் இன்ஜினியரிங், என அனைத்து படிப்புகளும் டிப்ளமோவில் உள்ளன.

3. டிப்ளமோ இன் கிராபிக் டிசைன்

வளர்த்து வரும் தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் மீடியா கன்டென்ட் உருவாக்கத்தில் கிராபிக் டிசைனர்களின் பங்கு மிகவும் முக்கியமாகி விட்டது. லோகோ டிசைனிங், ப்ராடக்ட் டிசைனிங்,போட்டோ எடிட்டர், லேஅவுட் டிசைனிங் என பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

4. டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

எல்லா காலத்திலும் சிறப்பாக இயங்கும் துறைகளில் ஒன்றாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஐ கூறலாம். உணவு இருப்பிடம் இரண்டும் நமக்கு அத்யாவசியமானவை. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அக்கவுண்ட்ஸ் தொடங்கி விளம்பரம் வரை அனைத்தும் இந்த படிப்பில் கற்பிக்கப்படுகிறது.

5. டிப்ளமோ இன் நர்சிங்

கடினமான டிப்ளமோ படிப்புகளில் ஒன்றாக நர்சிங் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு உலக அளவில் மார்க்கெட் உள்ளது. வெளிநாடுகளில் அதிக வாய்ப்பு உள்ளதால். வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் கூட இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்.

No comments