Breaking News

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி விரும்புவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும், கிராமப்புரங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

பசுமைச் சூழலில் அமைந்துள்ள இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, கணினிமயமாக்கப்பட்ட நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், ஆர்வலர்கள் தங்களை தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

கடந்த 28.05.2023-அன்று நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய தேர்வர்களில் 31 ஆர்வலர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஏழு பெண் ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 5.12.2022 முதல் 28.5.2023 வரை உண்டி உறைவிடத்துடன் கூடிய அறைகள் வழங்கப்பட்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வர்களுக்கு நடப்பாண்டில் 21 நேரடி தொடர்த் தேர்வுகள் மட்டுமல்லாது, இணையவழியில் 1.04.2023 முதல் 19.5.2023 வரை 40 தொடர்த்தேர்வுகள் (Online Test Series) நடத்தப்பட்டன.

குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜுன்-2023 முதல் செப்டம்பர்-2023 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சார்ந்த ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000/-(ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) வழங்கப்படும்.

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 15.6.2023 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 17.06.2023 (சனிக்கிழமை) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் 18.6.2023 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 19.6.2023 மற்றும் 20.6.2023 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 21.6.2023 முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் ஆர்வலர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழினையும் (Nativity Certificate) சேர்க்கையின் போது ஒப்படைக்க வேண்டும்.

அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில். 225 ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments