Breaking News

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தனுமா..? எளிமையான வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க..!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க பல நூற்றாண்டுகளாக மூலிகை வைத்தியங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. மாதிரியான மூலிகை வைத்தியங்கள் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.


இன்று உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் ஹைப்பர் டென்ஷன் என்று சொல்லப்படக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் இது இதய நோய், பக்கவாதம், மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற பல உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தும். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான மருந்துகள் மூலமாக பலர் அதிக ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்து வரும் பொழுது, ஒரு சிலர் கை வைத்தியங்களை நாடுகின்றனர்.


அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு சில மூலிகை வைத்தியங்கள் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள உதவும் இயற்கை தீர்வுகள். அப்படியான ஐந்து மூலிகை வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


பூண்டு: பூண்டு என்பது அதன் சிறப்பான மருத்துவ பண்புகளுக்காக பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வரும் ஒரு பிரபலமான மூலிகை பொருளாகும். அமெரிக்காவை சேர்ந்த நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, பூண்டு ரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் என கூறியுள்ளது. பூண்டில் காணப்படும் அலிசின் என்ற சேர்மம் ஆன்டி ஹைபர் ஹைப்பர்டென்சிவ் பண்புகளை கொண்டுள்ளது, அதாவது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய பண்புகள். நமது உணவில் அவ்வப்போது பூண்டை சேர்த்துக் கொள்வது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.


ஹவ்தோர்ன் எனும் இதயக்கனி: ஹவ்தோர்ன் என்பது நமது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு அற்புதமான கை வைத்தியமாக கருதப்படுகிறது. இதில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் ரத்த நாளங்களை சீரமைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக, அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகளை கொண்டிருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் சிவப்பு நிற பெர்ரி பழங்கள் போல் காணப்படும் இந்த இதயக்கனியை சாப்பிடும் முன்பு மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது.


செம்பருத்தி: செம்பருத்தி பூவின் காய்ந்த இதழ்கள் கொண்டு செய்யப்படும் செம்பருத்தி தேநீர் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒரு பிரபலமான இயற்கை தீர்வாகும். இந்த தேநீரானது ஏன்ஜியோடென்சின் கன்வெர்டிங் என்சைம் என்ற உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான நொதியை செயலிழக்கச் செய்து, ரத்த நாளங்களை தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உங்கள் அன்றாட வழக்கத்தில் செம்பருத்தி தேநீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பல வழிகளில் உதவும்.


இலவங்கப்பட்டை: பல ஆயுர்வேத மருந்துகளின் முக்கிய கூறாக இருக்கும் இலவங்கப்பட்டை பலவிதமான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. அந்த வகையில் இலவங்கப்பட்டை ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை குறைக்க ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கத்தை குறைக்க பட்டை உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை சமாளிக்க உங்கள் அன்றாட உணவில் பட்டையை சேர்ப்பது நன்மை பயக்கும்.


ஆலிவ் இலை: இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை ஆலிவ் இலை ஆகும். ஆலிவ் இலையில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டு மற்றும் அழற்சி எதிர்ப்பு (ஆன்டி இன்ஃப்ளமேட்டரி) பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த இலை ரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.


மேலே கூறப்பட்ட மூலிகை வைத்தியங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான ஒரு கூடுதல் கைவைத்தியங்களாக கருதப்படலாமே தவிர, மருந்துகளுக்கு மாற்றாகவோ அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஒரு மாற்றாகவோ எடுத்துக்கொள்ள கூடாது. மேலும் எந்த ஒரு மூலிகை வைத்தியத்தையும் உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் முன்பு ஒரு மருத்துவரை ஆலோசியுங்கள்.

No comments