அதீத வெப்பத்தால் 'ஹீட் ஸ்ட்ரோக்': எச்சரிக்கிறது சுகாதாரத்துறை
அதீத வெப்ப தாக்குதலால், முதியவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், காலை, 11:00 முதல், 4:00 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்ப தாக்குதலால் ஏற்படும் பக்கவாதம் பாதிப்பு, உடலின் வெப்ப நிலையையும், 104 டிகிரிக்கு மேல் அதிகரிக்கிறது.
மேலும், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் போன்றவையும்
செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.இதில், 50 வயதுக்கு
மேற்பட்டோர் அதிகளவில் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, காலை, 11:00
முதல், 4:00 மணி வரை முதியோர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க
வேண்டும். வீட்டில் இருந்தாலும், அதிகளவில் நீர், பழச்சாறு, அதிக
காரமில்லாத மற்றும் விரைவில் செரிமானமாகக் கூடிய உணவு பொருட்களை எடுத்து
கொள்ள வேண்டும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரும வறட்சி, மயக்கம்,
மன குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் போன்ற பாதிப்புகள்
கண்டறியப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.வெயிலில்
தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள, 'ஓ.ஆர்.எஸ்.,' பவுடர் கலந்த தண்ணீர்,
மோர், பழச்சாறு போன்றவற்றை அதிகளவில் எடுத்து கொள்ள வேண்டும். செயற்கை
குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments