அனைத்திலும் 35 மார்க்.. 10ம் வகுப்பில் பாஸ் - மகிழ்ச்சியுடன் கொண்டாடிய குடும்பம்!
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் என்பது சமீபத்தில் வெளியானது.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மட்டுமே சாதனைக்குரியவர்கள்
அல்ல. தோல்வியடையாமல் கடைசி வரை நின்று தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றவர்களும் சாதனையாளர்கள் தான். தேர்ச்சி அடையவில்லை என்றாலும் கூட இது
வெறும் தேர்வுதான். வாழ்க்கையையே தீர்மானிக்கும் ஒரு விஷயம் அல்ல.
இப்படி இருக்க, நாமெல்லாம் எங்கே தேர்ச்சி பெற போகிறோம் என்ற கவலை
ஒருபுறம் இருக்க, தன்னம்பிக்கையுடன் படித்து விழிம்பு நிலையில்
மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைகின்ற மாணவர்களின் மகிழ்ச்சி இருக்கிறதே,
அது சாதித்த மாணவர்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். மகாராஷ்டிர
மாநிலத்திலும் அப்படியொரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகிய தம்பதியரின் மகன் விஷால்
10ஆம் வகுப்பு படித்து வந்தான். கல்வி தேவைக்காக இவர்களது குடும்பம்
உதல்சார் பகுதியில் இருந்து தானே பகுதிக்கு குடிபெயர்ந்து வந்தது.
விஷாலுக்கு ஏற்கனவே படிப்பு ஏறாத நிலையில், குடும்பத்தின் வறுமை நிலை
காரணமாக பள்ளி செல்வதே சவாலான காரியமாக இருந்தது. இருப்பினும், தந்தையின்
அயராத முயற்சியால் தொடர்ந்து பள்ளி சென்றார் விஷால்.
இருப்பினும், தன்னால் தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என்ற கவலை
விஷாலுக்கு ஏற்பட்டது. அதே சமயம், வாழ்க்கையில் தான் முன்னேறுவதோடு
மட்டுமல்லாமல், தன் பெற்றோரின் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றி அமைக்க
வேண்டும் என்ற எண்ணம் சிறுவனின் மனதில் ஆழமாக இருந்தது. இன்னோரு பக்கம்
கல்வி மீதான பயமும் விஷாலுக்கு குறையவில்லை.
தேர்வில் தேர்ச்சி அடைந்து கல்வியை தொடர்ந்தால் மட்டுமே தான் நினைத்ததைப்
போல பெற்றோருக்கு உதவியாக இருக்க முடியும் என்று விஷால் நினைத்தாலும்
படிப்பு கொஞ்சம் கடினமாக தான் இருந்துள்ளது. ஆனால், அவனது பெற்றோர்
தொடர்ந்து ஊக்கம் கொடுத்தனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6
பாடங்களிலும் தலா 35 மதிப்பெண்களை பெற்று விஷால் தேர்ச்சி அடைந்துள்ளார்.
இவர் மராத்தி மொழி வழிக்கல்வி கொண்ட பள்ளியில் படித்து வந்தார்.
தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து விஷாலின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த
வெற்றியை கொண்டாடி தீர்த்தது. அக்கம், பக்கத்தினர், நண்பர்கள் என
பலருக்கும் இனிப்புகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து விஷாலின் தந்தை கூறுகையில், "குழந்தைகள் மிகப் பெரிய அளவில்
மதிப்பெண்கள் பெறுவதைத்தான் பல பெற்றோர் கொண்டாடுவார்கள். ஆனால், எங்களைப்
பொருத்தவரையில் விஷாலின் 35 சதவீத மதிப்பெண்கள் கூட பெரிய விஷயம் தான்.
10ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்ததன் மூலமாக எங்களை பெருமை அடைய
வைத்துள்ளான்'' என்று தெரிவித்தார்.
No comments