வெளிநாட்டில் படிக்க விருப்பமா? மோசடியாளர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி?
வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயில வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே இருக்கும். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கு சென்று கல்வி கற்று, கை நிறைய சம்பளத்தோடு முடிந்தால் கிரீன் கார்டு வாங்கி அங்கேயே தங்கிவிடவேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்.
ஒருவேளை, கல்வி கற்பதற்காக நீங்கள் வெளிநாடு செல்ல பயன்படுத்திய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
சமீபகாலமாக இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், வெளிநாட்டில் படித்துவரும் ஒருசில மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
உண்மையான பிரச்னை என்ன? மேலும் இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
இந்த விவகாரம் 2017ல் தொடங்குகிறது. பஞ்சாபைச் சேர்ந்த லவ்ப்ரீத் சிங் என்பவர் தனது படிப்பிற்காக கனடா செல்ல விரும்பினார். இதற்கான தேர்வை எழுதி, முகவர் மூலம் கனடாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்து முதல் செமஸ்டருக்காக ரூ.3.65 லட்சம் கட்டணமும் செலுத்தியுள்ளார். ஆனால், கனடா சென்றதற்கு பின்புதான் தெரிந்தது, அவர் படிப்பிற்காக எந்த கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தாரோ அந்த கல்லூரி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது என்பது. இதையடுத்து, வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு அவரது முகவர் அறிவுறுத்தியுள்ளார். லவ்ப்ரீத் சிங்கும் அவ்வாறே செய்துள்ளார்.
ஆனால், 5-6 ஆண்டுகள் கழித்து நிரந்தர வசிப்புரிமை கோரி அவர் விண்ணப்பத்தப்போது கனடாவில் நுழையும் போது லவ்ப்ரீத் காட்டிய அனுமதிக் கடிதம் போலியானது என்பதை கனடாவின் எல்லைப் பாதுகாப்பு ஆணையம் கண்டுபிடித்தது.
சுமார் 16 லட்ச ரூபாய் செலுத்தி முழு செயல்முறையையும் முடித்துவிட்டு கனடா வந்ததாக லவ்ப்ரீத் கூறுகிறார். ஆனால் கனடா நிர்வாகம் லவ்ப்ரீத் நாடு திரும்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
லவ்ப்ரீத் போன்றே 700 மாணவர்கள் வரை ஏமாற்றப்பட்ட விவகாரம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறும் இவர்கள், கனடா எல்லைப் பாதுகாப்பு ஆணையம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறுதியாக, ஜூன் 13, 2023 அன்று, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரம் தொடர்பாக பேசினார்.
"மாணவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக முடிவு செய்யப்படும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதே எங்கள் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பது எங்கள் நோக்கமல்ல'' என்றார்.
ஆனால் இந்த மாணவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டனர்?
இந்த மாணவர் சேர்க்கை மோசடிக்கு பின்னால் இருப்பவர் யார்?
கனடாவுக்கு போலி சான்றிதழ்கள் மூலம் சென்றதாக கூறப்படும் மாணவர்களில் பலரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் ஜலந்தரைச் சேர்ந்த பிரிஜேஷ் மிஸ்ரா என்ற ஆலோசகரால் கனடாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர் 'எஜுகேஷன் மைக்ரேஷன் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், மிஸ்ரா பீகாரைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே மாணவர்களின் ஆவணங்களைப் போலி ஆவணங்களாக தயாரித்ததற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹம்பர் கல்லூரியில் இருந்து இந்த மாணவர்களுக்கு மிஸ்ரா போலியான சேர்க்கை கடிதங்களை வழங்குவார், பின்னர் மாணவர்கள் கனடாவிற்கு வந்ததும் உங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனினும் நீங்கள் இப்போது அங்குள்ள வேறு எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திலும் சேரலாம் என்று கூறுவார். அதுமட்டுமில்லாமல், மாணவர்கள் யாரும் இது தொடர்பாக புகார் அளிக்காமல் இருக்க அவர்களிடம் பெற்ற பணத்தில் 4, 5 லட்சம் ரூபாயை அவர் திருப்பி தந்துவிடுவார்.
இவ்வாறு கல்விக்காக கனடா செல்லும் மாணவர்கள், அங்கேயே தங்குவதற்கு விண்ணப்பிக்கும்போது மாட்டிக்கொள்கின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள பிரிஜேஷ் மிஸ்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு ஏன் எவ்வித சந்தேகமும் வரவில்லை என்பது தொடர்பாக கேள்வி எழுகிறது.
வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான வழிமுறை என்ன?
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது இந்திய மாணவர்களின் கனவாக இருக்கிறது. இதற்காக SAT, ACT, IELTS, TOEFL, PTE, டியோலிங்கோ அல்லது கேம்பிரிட்ஜ் ஆங்கில பரிட்சை போன்றவை நடத்தப்படுகின்றன. இந்த பரிட்சைகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து அவர்கள் நினைத்த பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமா இல்லையா என்பதை முடிவு செய்துவிடலாம்.
முகவர்களின் மோசடி வேலை இங்கிருந்துதான் தொடங்கிறது. நாடு முழுவதும் இருக்கும் பெரிய பெரிய ஏஜென்சிகள் மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். மாணவர்கள் பெற்ற மதிப்பெண், அவர்களின் விருப்பம், பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு பல்கலைக்கழகத்தை கண்டுபிடித்து தருவதே இந்த ஏஜென்சிகளின் வேலை.
பல்கலைக்கழகம் ஒரு மாணவரை தேர்ந்தெடுத்து அவருக்கு அழைப்பு கடிதத்தை அனுப்பிவிட்டால், அதற்கு பின் ஏஜென்சிகளுக்கு வேலை எதுவும் கிடையாது. பின்னர், மாணவர்கள் விசா மற்றும் குடியேற்ற செயல்முறைகளை தாங்களாகவே மேற்கொள்ள வேண்டும், இதற்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவிடுகிறது.
இந்த இடத்தில் சிறிது குழப்பம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாக்பூரைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேசி ஓவர்சீஸின் மூத்த செயல்பாட்டு மேலாளர் அக்ஷய் தல்வி இது தொடர்பாக கூறும்போது, "பல நேரங்களில் மாணவர்கள் தங்கள் ஏஜெண்ட்களை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள், இதனால் மோசடிக்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது விஷயம் என்னவென்றால், மாணவர்கள் கூட தங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, ஆவண தயாரிப்புகள், பணப்பரிவர்த்தனைகள் போன்றவற்றை கூறலாம்" என்றார்.
ஆனால், தற்போது 700 மாணவர்கள்வரை ஏமாற்றப்பட்டு விட்டதால், மேலும் அது நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அக்ஷய் சில ஆலோசனைகளை வழங்குகிறார்;
சரியாக திட்டமிடுங்கள் - நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்? எந்த படிப்பை தொடர வேண்டும்? எந்த நம்பகமான ஏஜென்ட் மூலம் உங்களுக்கு தேவையான வழியைக் கண்டறிய முடியும்? என்பது பற்றி சரியாக முடிவு எடுங்கள்.
உங்கள் முகவர் கடவுள் இல்லை - கல்லூரி அல்லது பல்கலைக்கழகம்தான் உங்களுக்கு சேர்க்கைக்கான அனுமதியை அளிக்குமே தவிர ஏஜென்சிகள் அல்ல. எனவே அவரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். முன்கூட்டியே முழுப் பணமும் உங்களிடம் கேட்கப்பட்டால் ஏஜென்சி, ஏஜென்ட் ஆகியோர் குறித்து விசாரிக்கவும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியைச் சரிபார்க்கவும் - கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் உங்களுடைய சேர்க்கை உறுதிசெய்யப்பட்ட பிறகு, அந்த நிறுவனத்தின் முழு விவரங்களைக் கண்டறியவும். இணையத்தில் தரவரிசைகளும் உள்ளன - கல்லூரி தரவரிசை போன்றவற்றை சரி பார்க்கவும். அந்த கல்லூரியில் படித்து முடித்த முன்னாள் மாணவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கனடாவில் தற்போது நிகழ்ந்துவரும் விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமான வேலைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஞ்சாப் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விவகாரங்களின் அமைச்சர் குல்தீப் சிங் ஆகியோர் அதற்கான பணிகளை இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.
எனினும், இது எப்படி நிகழ்ந்தது, மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆராய கனடாவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் விவகாரம் தொடர்பாக இந்த குழு தீவிர விசாரணையை நடத்தி வருகின்றது.
தமிழ்நாடு மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனரா?
இந்த மோசடியால் தமிழ்நாடு மாணவர்கள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று 'ட்ரூமேட்டிக்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி'யின் இயக்குநர் சுரேஷிடம் பேசினோம். ` தமிழ்நாடு என்றில்லை, தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இதுபோன்ற மோசடி எதுவும் கிடையாது. மாணவர்களும் சரி, அவர்களின் சேர்க்கைக்கு உதவும் நிறுவனங்களும் சரி நேர்மையாக உள்ளனர். எனவே, தமிழ்நாடு மாணவர்கள் ஒருவர் கூட பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை அங்கிருக்கும் ஏஜென்சிகளை இங்கிருந்து தமிழ்நாடு மாணவர்கள் தொடர்புகொண்டு அதன் மூலம் வேண்டுமானால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ` கல்விக்காக வெளிநாடுக்கு செல்ல விரும்பினால் முதலில் கல்லூரி, பாடப்பிரிவு, எந்த நாடு போன்றவற்றை தெளிவாக முடிவு செய்துகொள்ள வேண்டும். இது மூன்றும் சரியாக இருந்தால், எங்கு சென்றாலும் யார் மூலமாக சென்றாலும் பிரச்னை இருக்காது. ஏதாவது குழப்பம் இருந்தால், ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏஜென்சிகளை தொடர்புகொண்டு அவர்கள் மூலமாக செல்லலாம்` என்று தெரிவித்தார்.
No comments