Breaking News

அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த கட்டிடத் தொழிலாளி மகள்.

 

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 538 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மகள் அன்னபூரணி சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாவட்டத்தின் கடைசி ஊர் என அழைக்கும் உலகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டாங்காடு என்ற பகுதியில் வசித்து கொண்டு கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் முருகன். இவருக்கு வயது 45. இவரது மனைவி சித்ரா(40) வீட்டை கவனித்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் அன்னபூரணிக்கு வயது 18. இவர் உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து தேர்வில் 600 க்கு 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் படிக்கும் போதே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்த அன்னபூரணிக்கு நீட் தேர்வு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவராகும் கனவோடு கடுமையாக பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினார்.

இந்நிலையில் நேற்று இரவு அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் வரிசையில் 720 மார்க்குக்கு 538 மார்க் எடுத்து சிவகங்கை மாவட்டத்தில் முதல் இடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.

ஏழ்மையிலும் மருத்துவராக வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் படித்து சாதனை செய்த கிராமத்து அரசு பள்ளி மாணவியை ஆசிரியர் பாரட்டினர். மேலும் தான் மருத்துவரானதும் மாவட்டத்தின் கடைசி கிராமமான உலகம்பட்டி கிராமத்தில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என மாணவி அன்னபூரணி கூறினார். நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தனது மருத்துவக் கனவு நிறைவேறியது மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி.

No comments