Breaking News

10ம் வகுப்பு தேர்வில் இன்டர்னல் மார்க் வழங்க கோரிக்கை!

 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்ட பொது தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறைவதால் சி.பி.எஸ்.இ. போல் அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீடு என்ற 'இன்டர்னல்' மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சி.பி.எஸ்.இ. என்ற மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுதுவோரில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.

இதற்கு சி.பி.எஸ்.இ. யில் பின்பற்றப்படும் 20 இன்டர்னல் மதிப்பெண் முக்கிய காரணமாக உள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில் அந்த மதிப்பெண் இல்லை என்பதால் தேர்ச்சி குறைகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 10ம் வகுப்பு தேர்வில் 79,000 பேர் தேர்ச்சி பெறவில்லை.

எனவே தமிழக பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க இன்டர்னல் மதிப்பெண் முறை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் மாநில பொது செயலர் இளங்கோ கூறியதாவது: மேல்நிலை கல்வி தொழில்கல்வி அரசு தனியார் துறை வேலை ஓட்டுனர் உரிமம் ஆகிவற்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

தமிழக பாடத்திட்ட தேர்வு நடைமுறையால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் தமிழக பாடத்திட்டத்தில் பின்பற்றப்படும் 10ம் வகுப்பு தேர்வு நடைமுறையால் ஆண்டுக்கு சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையை சீர்செய்யவும் இளைய தலைமுறையினரை கல்வியில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் 10ம் வகுப்பு தேர்வு முறையை மாற்றுவது அவசியம்.

சி.பி.எஸ்.இ. போன்று தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திலும் 10ம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்த பட்சம் 20 மதிப்பெண் அக மதிப்பீடாக வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கினால் பள்ளிகளுக்கு விடுப்பு இன்றி வருவோர்; கல்வி சார் இணை செயல்பாடுகளில் ஈடுபடுவோர் அகமதிப்பீடு கிடைத்து தேர்ச்சி பெற வசதியாக இருக்கும். எனவே தமிழக பள்ளிக்கல்வி துறை இதுகுறித்து உரிய முடிவெடுத்து 10ம் வகுப்புக்கு இன்டெர்னல் மதிப்பெண் முறையை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments