வருமான வரி கணக்கு தாக்கல்.... 31-ம் தேதிக்குள் செய்யாவிட்டால்..?
இந்த மாதத்தின் கடைசி நாளான 31-ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும்.
இதைச் செய்யாவிட்டால், ரூ.5,000 அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை என்கிற நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்!
நாட்டின்
குடிமகன்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய வருமானத்துக்குரிய வரியைக் கட்டியாக
வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்கள் தரும் வரிப்
பணத்தைக் கொண்டுதான் அரசாங்கங்கள் பல்வேறு நலத் திட்டங்களை வெற்றிகரமாக
நடத்துகின்றன. இத்தனை முக்கியமான வேலையைக் கடைசி நாள் வரை ஒத்திவைப்பது
சரியல்ல. காரணம், கடைசி நேரத்தில் பலரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
முற்பட்டால், வருமான வரித் துறையின் இணையதளம் முடங்க வாய்ப்புண்டு. அதனால்
கடைசி தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமலே போய், தேவை இல்லாமல்
ரூ.5,000 வரை அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்!
இது ஒரு பக்கம்
இருக்க, கடந்த நிதி ஆண்டில் வருமான வரியை சரியாகத் திட்டமிடாமல் போனதன்
விளைவாக வருமான வரிச் சலுகைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், அதிகமான
வரியைப் பலரும் கட்டியிருக்கலாம். இது மாதிரியானவர்கள் இந்த நிதி
ஆண்டுக்கான வரித் திட்டமிடலை இப்போதே செய்து, அதைச் சரியாக செயல்படுத்தத்
தொடங்கலாம்.
பொதுவாக, வரிதாரர்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில்
வரித் திட்டமிடலை செய்கிறார்கள். வருமான வரி தாக்கல் செய்யும் பழைய முறையாக
இருந்தாலும் சரி, புதிய முறையாக இருந்தாலும் சரி, இதில் தனக்குப்
பொருத்தமானது எது, எவற்றுக்கெல்லாம் வரிச் சலுகை உண்டு, எவற்றுக்கெல்லாம்
இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதன்படி வரித் திட்டமிடல்
செய்வது அவசியம். இதைச் செய்ய இதற்கென இருக்கும் நிபுணர்களின் ஆலோசனையைப்
பெறுவது அவசியம். இந்த ஆலோசனைக்காக சில ஆயிரம் ரூபாயைத் தரத் தயங்கக்
கூடாது. இதன் மூலம் பல ஆயிரங்களை மிச்சப்படுத்த முடியும் என்பது நிச்சயம்!
அடுத்து,
நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 50
சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளுடன்தான்
வாழ்கிறார்கள். ஆனால், மொத்தத்தில் வெறும் 3 சதவிகிதம் பேர்தான் வருமான வரி
செலுத்துபவராக இருக்கிறார்கள். மாறாக, வரி செலுத்தும் அளவுக்கு வருமானம்
கொண்ட அனைவருமே வரி செலுத்த முன் வர வேண்டும். அப்படி செய்தால்,
மக்களுக்கான நலத் திட்டங்களை இன்னும் சிறப்பாக அரசாங்கத்தால் செய்ய
முடியும்.
அதேபோல, பணத்தை ரொக்கமாக வாங்குவதையும் கடுமையான கட்டுப்
பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கணக்கில் கொண்டுவராமல்,
கறுப்புப் பணமாக்க நினைப்பவர்களைக் கட்டுப்படுத்தி, வரி வருவாயைக்
கணிசமாகக் கூட்ட முடியும். வருமான வரியின் பலன் அனைவருக்கும் சென்று
சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும்!
- ஆசிரியர்
No comments