Breaking News

தினமும் இரவு ஒரு டம்ளர் சீரகத் தண்ணீரைக் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?


ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் முக்கியமான ஒரு பொருள் தான் சீரகம்.

என்ன தான் சீரகம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தந்தாலும், அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

தினசரி உணவில் சீரகத்தை சேர்த்து வரும் போது, அது உடலினுள் பல மாயங்களைப் புரியும் என்பது தெரியுமா? அதுவும் அந்த சீரகத்தை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

5000 ஆண்டுகளுக்கும் மேலாக சீரக நீர் ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அறிவியல் ரீதியாகவும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மக்கள் தங்களின் தினசரி நீராக சீரக நீரைத் தான் குடித்து வருகிறார்கள்.

குறிப்பாக சீரக நீரை இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், உடலினுள் பலவிதமான அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? கீழே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சீரக நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

1. செரிமானம் மேம்படும்

நீங்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவரா? என்ன செய்தாலும் செரிமான பிரச்சனைகள் போகவில்லையா? அப்படியானால் சீரக நீரை குடித்து வாருங்கள். சீரக நீரானது வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானம் சீராக நடைபெற உதவி புரியும். ஏனெனில் சீரகமானது கொழுப்பை உடைக்கும் நொதிகள், க்ளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவற்றை சுரக்க உதவி பரிந்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.

இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்புக்கள் ஜீரணிக்கப்படுவதோடு, கல்லீரலில் இருந்து பித்த நீர் உற்பத்தியின் செயல்முறை வேகப்படுத்தப்படுகிறது. ஆகவே அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சந்தித்தால், சீரக நீரை தினடும் குடித்து வாருங்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

2. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நமது உடலைத் தாக்கும் கிருமிகளிடம் இருந்து நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதுகாப்பளிக்கிறது. சீரக விதைகளில் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகின்றன.

இது தவிர சீரகத்தில் வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடம் இருந்து உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. எனவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டுமானால், சீரக நீரை தினமும் இரவு ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

3. அழற்சி எதிர்ப்பு பண்புகள்

சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த விதைகளை எடுப்பதன் மூலம், உடலினுள் உள்ள அழற்சி/வீக்கம் குறைந்து, வலி மற்றும் காய்ச்சலும் குறையும். மேலும் சீரகத்தில் தைமோக்யூனோன் என்னும் பொருள் உள்ளது.

இது கல்லீரல் அழற்சியில் இருந்து பாதுகாப்பளிப்பதோடு ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் சீரக நீரைக் குடித்து வந்தால், அந்த வலியில் இருந்து விடுபடலாம்.

4. இதயத்திற்கு நல்லது

சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக இது இதயத்திறகு பாதுகாப்பளித்து, பல்வேறு இதய பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவி புரிகிறது.

அதுவும் சீரக நீரை தினமும் குடித்து வந்தால், அது இதய தசைகளை வலுவாக்குவதோடு, கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் உடலில் தேங்குவதைத் தடுத்து மாரடைப்பு, இதயத்தில் அடைப்பு போன்றவை ஏற்படும்அபாயத்தைக் குறைக்கிறது .

5. இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்

சீரக நீரை தினடும் குடித்து வந்தால், அது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த சீரக நீரைக் குடிப்பது நல்லது. கூடுதலாக இது க்ளைகோசிலேட்டட் ஹீமோகுளோபினைக் குறைக்கிறது.

எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், தங்கள் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன்பு மட்டுமின்றி, ஒவ்வொரு வேளை உணவு உண்ட 30 நிமிடத்திற்கு பின்பும் சீரக நீரைக் குடிக்க வேண்டும்.

6. எடை இழப்பிற்கு உதவும்

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? உங்கள் உடல் எடை எளிய முறையில் குறைய வேண்டுமா? அப்படியானால் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்க சீரக நீரைக் குடியுங்கள் போதும்.

ஏனெனில் சீரக நீரானது உடலில் உள்ள அதிப்படியான கொழுப்பைக் கரைப்பதோடு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே உடல் எடை சீக்கிரம் குறைய வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதைத் தவிர, சீரக நீரையும் தினமும் குடித்து வாருங்கள்.

No comments