Breaking News

இதை தெரிஞ்சிக்கோங்க ? என்ன விதைக்கிறோமோ அதையே பெறுகிறோம்.!ஒருஅழகான கதை -ஒரு முறை நம்குழந்தைகளை படிக்க வைப்போம் :

கிழ்மதி என்னும் கிராமம் ஒன்று இருந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி உறவினர்களாய் சகோதரத்துவத்தோடு பழகிவந்தார்கள்.

ஊரில் எல்லா வளங்களும் இறைவனின் அருளால் நிறைந்து இருந்தது. மக்கள் எவ்வித குறையு மில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரின் சிறப்பு என்றால் காவல் தெய்வங்கள் தான். எல்லைச்சாமி எனப்படும் காவல் தெய்வமும் அதற்கு துணைபுரியும் சிறு தெய்வங்களும் அந்த ஊர் எல்லையைக் காவல் காக்கிறது. வெளியூரிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்தச் சாமிகளின் அனுமதியைப் பெற்ற பிறகே கிராமத்துக்குள் நுழைய முடியும்.

எல்லைச்சாமி சிலைக்கு பேசும் சக்தி உண்டு. அதனால் தீய என்ணத்துடன் அந்தக் கிராமத்துக்கு யார் உள்ளே நுழைந்தாலும் ஆசாமியாய் எதிர்பட்டு அவர்களைத் தடுத்துவிடும். அதனால் அந்த ஊருக்குள் எவ்வித கேடும் வராமல் இருந்தது. ஒரு நாள் வேற்று கிராமத்திலிருந்து ஒருவன் அந்தக் கிராமத்துக்கு பிழைப்பு தேடி கூட்டாளிகளோடு வந்தான். திடீரென்று எல்லைச்சாமி ஆசாமியாய் மாறி வழி மறித்தது. "என்னப்பா ஊருக்கு புதுசா? உன்னை இந்த ஊர்ல பார்த்ததில்லையே" என்றார்.

"ஆமாம் ஐயா இந்த ஊரில் பிழைப்பு தேடி வந்திருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?" என்றான். "ஏனப்பா அப்படி கேட்கிறாய்" என்றார். "இல்லை முன்னாடி இருந்த ஊரில் மக்கள் மிகவும் மோசமான எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். குரோதத்துடன் பிறரைப் பார்ப்பார்கள். எப்போதும் பிறரைப் பற்றி தவறாக பேசிக்கொண்டிருப்பார்கள். யாரையும் வாழவிட மாட்டார்கள். அதனால் தான் அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் இந்த ஊருக்கு வந்துவிட்டோம். சரி இந்த ஊராவது நல்லதா இருக்குமா என்றுதான் யோசனையாக இருக்கிறது. அதான் உங்களைக் கேட்டேன்" என்றான்.

எல்லைச்சாமி சட்டென்று பதில் சொன்னார். "அட நீ வேறப்பா உங்க ஊரை விட இந்த ஊரு இன்னும் படு மோசம். எப்பவும் அடுத்தவங்க பிழைப்பைத்தான் பார்ப்பாங்க. உனக்கு இந்த ஊரு சரிபடுமான்னு தெரியல. அதனால் வேற ஊரு பாருப்பா. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்" என்றார். "ஐயையோ அப்படின்னா இந்த ஊரு வேண்டாம்பா நாங்க வேற ஊரு போறோம்" என்று கூட்டாளிகளோடு கிளம்பிவிட்டான். அவன் பின்னாடியே இன்னொருவன் வந்தான்.

"ஐயா, நான் பிழைப்பைத் தேடி இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தை நான் தான் காப்பாற்ற வேண்டும். இந்த ஊரில் பிழைக்க முடியுமா?" என்று கேட்டான். "ஏன் உன்னுடைய ஊர் பிடிக்கவில்லையா?" என்றார் எல்லைச்சாமி. "என்னுடைய ஊர் போல் எங்கு போனாலும் வராது ஐயா. நல்ல மக்களும், நல்ல வளமும் உள்ள அன்பான ஊரு தான். ஆனால் மழைபொய்த்ததால் நீரின்றி கிராமமே வெளியேறுகிறது. அதனால்தான் வேறு வழியில்லாமல் இங்கு வருகிறோம்.

நல்ல மக்களோடு வாழ்ந்துவிட்டோம். வரும் இடமும் அப்படியே இருந்தால் மேலும் மகிழ்ச்சியாயிற்றே" என்றான். "இந்த ஊரும் நல்ல ஊர்தான் தம்பி.. உன் குடும்பம் இந்த ஊரிலும் மகிழ்ச்சியாக இருக்கும். இங்கிருக்கும் மக்களும் நன்மக்களே" என்றார். அவன் மகிழ்ச்சியோடு குடும்பத்தோடு வந்தான்.

"எல்லைச்சாமியைச் சுற்றி நின்ற சிறு தெய்வங்கள் ஏன் முதலில் வந்தவனை தடுத்தும் இரண்டாமவனை அனுமதித்தும் தீர்ப்பு சொன்னீர்கள்" என்று கேட்டது. "முதலில் வந்தவன் மனம் முழுக்க அழுக்கு. அவன் பார்க்கும் பார்வையும் கேட்கும் வார்த்தைகளும் அழுக்கு நிறைந்தவை. அவன் இங்கு வந்தால் இங்கிருப்பவர்களின் மனமும் மாறிவிடும். அதனால் தான் அவனை விரட்டினேன். ஆனால் இரண்டாமவன் நல்ல எண்ணங்களைக் கொண்டு நட்பு சூழ வாழ்ந்தவன். அவன் சுற்றியிருப்பவர்களின் மகிழ்சியையும் அவர்கள் துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவன். அதனால் தான் மகிழ்மதியின் மகிழ்ச்சி இவனால் இரட்டிப்பாகும் என்று அனுமதித்தேன்" என்றார் எல்லைச்சாமி.

நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் திரும்ப கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் அன்பு, சந்தோஷம் அனைத்தையும் அளவில்லாமல் கொடுத்து இறைவன் அருளை பெறலாம்.

No comments