Breaking News

பள்ளிக்கூடமா? சித்திரவதைக்கூடமா? ஆசிரியர்கள் உரிமைக்காக குரல் கொடுப்போம் வாரீர்..! ஐபெட்டோ அண்ணாமலை அழைப்பு!

 


தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான வா. அண்ணாமலை, ஆசிரியர் சங்கங்களே..! என்று தலைப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ஆசிரியர் சங்கங்களே..! நாமெல்லாம் ஒரு மண்ணில் படர்ந்த கொடிகள்! ஒரு கொடியில் பூத்த மலர்கள்..! ஒரு மலரில் விரிந்த இதழ்கள்..! ஒரு இதழில் ஓடும் நரம்புகள்..! என்பதை நம்மால் மறுக்க முடியுமா..? மறக்கத்தான் முடியுமா..?

நமக்கு அடையாள முகவரி, நம் மீது நம்பிக்கை வைத்து நம் சங்கத்தில் உறுப்பினர் கையொப்பமிட்டுள்ள ஆசிரியர்கள் தான் என்பதை நெஞ்சில் நிலை நிறுத்திக் கொண்டு மதித்து போற்றி வருகிறோம். அன்றாடம் அவர்கள் முகத்தில் தான் விழிக்கிறோம். அவர்களை நம்பித்தான் சங்கங்களை நடத்தி வருகிறோம் என்பதை புறந்தள்ளி விட முடியுமா?

அந்தோ பரிதாபம்..! நெஞ்சமெல்லாம் கனக்கிறது. பள்ளிக்கூடத்தினை அன்றாடம் ஆசிரியர்களை சித்திரவதை செய்யும் இடமாக தேர்வு செய்து, இம்சை அரசர்களாக மன உளைச்சலை தந்து வருகிறார்களே! நம் கண்ணில் படவில்லையா? காதில் விழவில்லையா?

அவர்களுடைய நெஞ்சக் குமுறல்கள் நம் நெஞ்சத்தைத் தொடவில்லையா? EMIS இணையதளச் சித்திரவதை, அன்றாடம் புள்ளி விபரங்கள், எண்ணும் எழுத்தும் படுத்தும் பாடு, மருத்துவர் செய்யக்கூடிய பணிகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்; எழுத்து அறிவிக்கும் இறைவன், மாணவர்களின் பாதம் தொட்டு அளவெடுக்க வேண்டும்; தோள்பட்டை அளவு, இடுப்பு, உயரம், எடை எல்லாவற்றையும் அளவு எடுத்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்;

ஓராசிரியர் பள்ளிகளாக இருந்தால், ஐந்து வகுப்பு மாணவர்களையும் ஒரே ஆசிரியர் பார்த்துக் கொள்ள வேண்டும். பணித்திறன் பயிற்சிக்கு 1,2,3ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களும் செல்ல வேண்டும். 4,5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கும் அந்த ஆசிரியரே செல்ல வேண்டும். 6, 7, 8ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள், தனித்தனியாக பள்ளி வேலை நாளில் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

மட்டுமல்லாமல், பயிற்சி கூட்டம் வேறு தொடர்ந்து நடத்துகிறார்கள். எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள், துணைக்கருவிகளை தயாரிப்பதிலேயே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். மாதம்தோறும் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்கள்; அதனை பார்வையிட தொண்டு நிறுவனங்களின் சிறப்பு கருத்தாளர்கள்; மொத்தத்தில் யார் வேண்டுமானாலும் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம்.

யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். ஆசிரியர்களிடம் எந்தக் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற நிலைமையில் ஆசிரியர்கள் உள்ளார்கள். குறிப்பாக 40, 45 வயதில், பெண் ஆசிரியர்கள் பலர் விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். பாதி பேர் இவர்களின் சித்திரவதையைத் தாங்க இயலாமல் விருப்ப ஓய்வில் சென்று விட்டார்கள். நெஞ்சு வலி, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. கொரோனா காலத்தை விட கல்வித்துறையின் கொடூரகாலத்தில் தற்போது வாழ்ந்து வருகிறோம்.

இப்படியெல்லாம் சித்திரவதைக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் CRC கூட்டத்திற்கு சென்றால் நம்முடைய ஆசிரியர்களை வைத்தே நம்மைப் பார்த்து நலந்தானா..? நலந்தானா..? உடலும் உள்ளமும் நலந்தானா..? என்ற பாடலை பாடி நடனமாட செய்கிறார்கள். இவையெல்லாம் பயிற்சியில் நமக்கு ஏற்பட்டு வரும் அவமானங்கள். ஆசிரியர் சங்கங்களே..! இதற்குத் தீர்வுதான் என்ன?

ஆசிரியர் சங்கங்களே..! நமது அரசு நம்மை விட்டு விலகிச் சென்று விட்டது. தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது கிராமத்துப் பழமொழி. ஆனால் நமது அரசு, தன்னார்வலர்கள் உட்பட அனைவரையும் அனுப்பி கேள்விகளுடன் பார்வையிடலாம் என்ற நிலைமையினை உருவாக்கி வருகிறார்கள்.

நமது அரசு..! எங்கள் அரசு..! என்று பிரியமுடன் அழைத்து வந்தோமே..? கண்டவர்களை எல்லாம் அழைத்து வந்து சித்திரவதை செய்யச் சொல்லும் இம்சை அரசாக மாறலாமா? என்ற பெண் ஆசிரியர்களின் இதயக் குமுறல்கள் நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கோட்டைக்குச் சென்று கேட்டுப் பார்த்தோம், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. டிட்டோஜாக் பதாகையினை உயர்த்திப் பிடித்து வீதிக்கு வந்து குரல் கொடுப்போம்; விடுதலை பெறும்வரை நமது குரல் களத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கட்டும்..!

50 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களுடன் இணைந்து இரண்டறக் கலந்து இயக்கம் நடத்தி வருகிறவன் என்ற முறையிலும், கூட்டுப் போராட்டங்களை முன்நின்று நடத்தி மூன்று முறை கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று அனுபவத்தினை பெற்று வந்தவன் என்ற முறையிலும், உங்களை கரம் பிடித்து கரம் குலுக்கி அழைக்கின்றேன்..! மாணவர்களின் கல்வி நலனையும் காப்போம், ஆசிரியர்களின் நலனையும் பாதுகாப்போம். மாணவர்களின் முகம், ஆசிரியர்களின் முகம் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிய வேண்டும்.” இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments