தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்:
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. இதேபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை வரும் 8ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் வரும் 7 மற்றும் 8ம்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ., மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 15 செ.மீ., மழையும், வால்பாறை, மேல் பவானி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
No comments